பாராட்டினாரு.. பாட்டு எழுத கூப்பிடவே இல்லை..அப்புறம்தான் புரிஞ்சது!. கவிஞர் சொன்ன ரகசியம்...
கண்ணதாசன், வாலி ஆகியோர் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில் தனது தனித்துவமான வரிகளால் இசை ரசிகர்களை ஈர்த்தவர் கவிஞர் முத்துலிங்கம். இவர் எம்.ஜி.ஆர் முதல்வராவதற்கு முந்தைய சினிமா வாழ்வின் கடைசி காலகட்டத்தில் வெளிவந்த “உழைக்கும் கரங்கள்”, “ஊருக்கு உழைப்பவன்”, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” ஆகிய திரைப்படங்களில் பல பாடல்களை எழுதியுள்ளார்.
மேலும் “கிழக்கே போகும் ரயில்”, “புதிய வார்ப்புகள்”, “உதிரிப்பூக்கள்” போன்ற திரைப்படங்களிலும் பாடல்களை எழுதியுள்ளார். அதே போல் சமீப காலத்தில் வெளியான சந்தானத்தின் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற திரைப்படத்தில் கூடபாடல்கள் எழுதியுள்ளார்.
கமல்ஹாசன் இயக்கி நடித்த “விருமாண்டி” படத்தில் பல பாடல்களை எழுதியது முத்துலிங்கம்தான். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கவிஞர் முத்துலிங்கம், இளையராஜாவுடன் பணியாற்றியது குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
பாடல் எழுத அழைக்காத இளையராஜா
1983 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் மோகன், ரோஹினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “இளமை காலங்கள்”. இத்திரைப்படத்தில் “பாட வந்ததோ கானம்”, “ராகவனே ரமணா” போன்ற பிரபல பாடல்களை முத்துலிங்கம் எழுதியிருந்தார்.
இதில் “ராகவனே ரமணா” என்ற பாடலில் “தியாகேசர் உன்னை கண்டு பதித்தாரே, சங்கீத மலர்கொண்டு துதித்தாரே” என்று சில வரிகளை எழுதியிருந்தார். இந்த வரிகளை பார்த்து இளையராஜா, “இந்த வரிகளின் மூலம் எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டீர்கள்” என கூறியிருக்கிறார். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, அதன் பின் முத்துலிங்கத்தை பாடல்கள் எழுத அழைக்கவே இல்லையாம் இளையராஜா.
இது குறித்து கவிஞர் முத்துலிங்கம் அப்பேட்டியில் கூறியபோது, “அதன் பின் என்னை பாடல் எழுத இளையராஜா அழைக்கவே இல்லை. அப்போதுதான் எனக்கு சந்தேகம் வந்தது. அவர் ‘இந்த வரிகளால் எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டீர்கள்’ என்று கூறினாரா அல்லது ‘ஆழமாக புதைந்துவிட்டீர்கள்’ என்று கூறினாரா என்று” என மிகவும் கிண்டல் தொனியில் பேசியிருந்தார். எனினும் சில மனஸ்தாபங்களுக்கு பிறகு மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியிருக்கிறார் முத்துலிங்கம்.
இதையும் படிங்க: எல்லா பணமும் போச்சு-சிம்பு பட தயாரிப்பாளரின் குமுறல்… அப்படி என்ன நடந்தது தெரியுமா?