“என்னுடைய முதல் படம் அன்னக்கிளி கிடையாது”.. ரசிகர்களுக்கு டிவிஸ்ட் வைத்த இளையராஜா…
மூன்று தலைமுறையாக இசைஞானியாக வாழ்ந்து வருபவர் இளையராஜா என்று கூறினாலும் அது மிகையாகாது. 1970களில் தொடங்கிய இவரின் பயணம், இன்று வரை வேகத்தடையே இல்லாமல் சென்றுகொண்டு இருக்கிறது.
இந்த 79 வயதிலும் தனது இளமை மாறாத இசையை ரசிகர்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார். இப்போது கூட வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் தற்போது ராஜ்ய சபாவின் எம்பி ஆகவும் திகழ்கிறார்.
பண்ணைபுரத்தில் தொடங்கிய இவரது பயணம் பாராளுமன்றம் வரை வெற்றி நடையாய் சென்றிருக்கிறது என்பது நம் கண்முன்னே நிகழ்ந்த மிகப்பெரும் ஆச்சரியம் தான்.
இளையராஜா 1976 ஆம் ஆண்டு மே மாதம் சிவக்குமார் நடிப்பில் வெளியான “அன்னக்கிளி” திரைப்படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுவரை யாரும் அறியாத ஒரு செய்தியை சொல்லி டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இளையராஜா.
1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரவிச்சந்திரன், ஜெயசித்ரா, விஜயக்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வரப்பிரசாதம்”. இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கோவர்த்தனம். இந்த நிலையில் இத்திரைப்படத்திற்காக கோவர்த்தனமுடன் இணைந்து இளையராஜா பணியாற்றியிருக்கிறார்.
அந்த வேளையில் இத்திரைப்படத்தின் பின்னணி இசையை இளையராஜாவையே இசையமைக்கச் சொல்லியிருக்கிறார் கோவர்த்தனம். இந்த அரிய செய்தியை தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளையராஜா பகிர்ந்துள்ளார்.
அதாவது இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகியது “அன்னக்கிளி” திரைப்படம் தான் என்றாலும் அவரது முதல் படம் என்னவோ “வரப்பிரசாதம்” தான் என தெரியவந்துள்ளது.