வைரமுத்துவா? இளையராஜாவா?... பாரதிராஜா சந்தித்த தர்மசங்கட நிலை…
பாரதிராஜா-இளையராஜா நட்பு
பாரதிராஜாவும் இளையராஜாவும் பல காலமாக சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருபவர்கள். இப்போதும் சிறந்த நண்பர்களாகவே இருக்கிறார்கள். பாரதிராஜா முதன்முதலில் இயக்கிய “16 வயதினிலே” திரைப்படத்தில் இருந்து “நாடோடித் தென்றல்” திரைப்படம் வரை இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர்.
ஆனால் இதனிடையே பாரதிராஜா இயக்கிய “கடலோரக் கவிதைகள்” என்ற திரைப்படம் வரை வைரமுத்து பாடல்கள் எழுதிவந்திருக்கிறார். அதன் பின் இளையராஜாவோடு இணைந்து வைரமுத்து பணியாற்றவில்லை. இப்போது வரை இவர்களுக்கிடையே அப்படி என்ன மோதல் என்பது குறித்து தெரியவில்லை.
இருவரும் இது குறித்து என்றுமே பதிலளித்ததில்லை. ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் வைரமுத்துவிடம், “இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை?” என்று கேட்டபோது, அவர் “வைரமுத்துவிற்கு இளையராஜா பிரச்சனை, இளையராஜாவிற்கு வைரமுத்து பிரச்சனை” என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது, இளையராஜா, வைரமுத்து ஆகியோரை குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
வைரமுத்து வேண்டாம்
அதாவது “கடலோரக் கவிதைகள்” திரைப்படத்தின் பாடல்கள் பதிவின்போது அத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பள்ளிக்கூடம் போகாமலே” என்ற பாடலை வைரமுத்து எழுதுவதாக இருந்ததாம். ஆனால் அதற்குள் அந்த பாடலை இளையராஜா எழுதிவிட்டாராம்.
வைரமுத்து இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு போனபோது, இளையராஜா அவரது உதவியாளரை கொண்டு வைரமுத்துவை திரும்ப வீட்டிற்கே அனுப்பிவிட்டாராம்.
இதனை தொடர்ந்து பாரதிராஜா, “வேதம் புதிது” திரைப்படத்தை இயக்கியபோது இளையராஜா, “வைரமுத்து பாட்டெழுதுவதாக இருந்தால் நான் இசையமைக்கமாட்டேன்” என கூறினாராம். அதனை தொடர்ந்துதான் பாரதிராஜா “வேதம் புதிது” திரைப்படத்திற்கு வேறு இசையமைப்பாளரை பயன்படுத்திக்கொண்டாராம். இவ்வாறு அந்தணன் அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.