More
Categories: Cinema History Cinema News latest news

இளம் கவிஞனின் வரிகளுக்குப் புத்துயிர் கொடுத்த இளையராஜா….! அசத்தும் பாடல்களைக் கேளுங்க…

பாடல்கள் தான் நம் மனதுக்கு இதமான மருந்து. அதை நாம் அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். கண்ணுக்குத் தெரியாத இசை செவியைக் குளிரச் செய்து மனதிற்கு இதமளிக்கிறது. இதை எல்லா இசையாலும் செய்து விட முடியாது. ரம்மியமான இசையால் மட்டுமே முடியும்.

இசை உலக ஜாம்பவான்களின் இசை இத்தகைய அளப்பரிய பணியைச் செய்து காட்டிவிடும். அவர்களில் ஒருவர் தான் ராகதேவன் என்று எல்லோராலும் சிறப்பித்து சொல்லப்படும் இசைஞானி இளையராஜா. இவர் தந்த மெல்லிசைப் பாடல்களை அவ்வளவு எளிதில் நாம் விவரித்து விட முடியாது.

Advertising
Advertising

Ilaiyaraja

சொல்லில் அடங்காத பல பிரத்யேக ரசனைகளின் தொகுப்பு தான் இவை. அவற்றில் இருந்து எந்த ஒரு பாடலை எடுத்தாலும் நாம் மணிக்கணக்காக விவரித்து விட முடியும். அவற்றில் ஒருபடப் பாடலைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பாரதிராஜாவின் நிழல்கள் படத்தை எடுத்துக் கொண்டால் பாடல்கள் அனைத்துமே தேனாக இனிக்கும். இளையராஜாவின் மெட்டுகள் அந்த அளவு நம்மைக் கட்டிப்போடும். வைரமுத்து முதன்முதலாக எழுதிய பாடலும் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளது.

இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் நாம் சற்று நேரம் ஆனந்தப் பரவசத்துடன் அந்த மெல்லிசையை ரசித்துக் கொண்டு இருப்போம்.

1980ல் பாரதிராஜா-இளையராஜா கூட்டணியின் 6வது வெற்றிப்படமாக வெளியானது நிழல்கள். கதை, வசனத்தை மணிவண்ணன் எழுதியிருந்தார். அந்தக் காலகட்டத்தில் தலையாய பிரச்சனையாக இருந்தது வேலையில்லாத் திண்டாட்டம் தான். பல்வேறு காரணங்களுக்காக படமோ தோல்வியைத் தழுவியது. ஆனால் இசை மட்டும் இன்றும் ஜெயித்து நிற்கிறது.

இளையராஜாவின் பாடல்கள் என்றாலே அது காட்சிப்படுத்தப்பட்டது முதல் வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தியது வரை அணுஅணுவாக நம்மை ரசிக்க வைக்கும். சில பாடல்கள் படத்தில் இடம்பெறாமலே போய்விடுவதுண்டு.

ஜானகியின் ஆலாபனை, பாடலின் முகப்பு இசையில் இதுவரையிலும் சொல்லாத காதல் வலியை உணர்த்திவிடும். வீணை இசை ஒலிக்கும். மனதுக்குள் பாடிக்கொள்ளும் ரகசியக்குரலில் தொடங்கும் இந்தப் பாடல்.

இந்தப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் தூரத்தில் நான் கண்ட உன் முகம் என்று ஆரம்பிக்கும். பாடல் மெல்ல மெல்ல தொடங்கி கடைசியில் விஸ்வரூபம் எடுக்கும். பெண் மனதின் புலம்பல்கள் எப்படிப்பட்டவை என்பதை தனது வாத்தியக்கருவிகளின் மூலமாக பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார் இசைஞானி .

Vairamuthu

சரணத்துக்கு முன் புல்லாங்குழல் இசை, அவநம்பிக்கையில் பிதற்றித் திரியும் மனதை அப்படியேப் படம் பிடித்துக் காட்டிவிடும். 2வது நிரவல் இசை, காதல் மனதின் உக்கிரத்தை உணர்த்தும். இதற்கு வயலின் இசைக்கோவையை அற்புதமாகப் பயன்படுத்தியிருப்பார்.

உக்கிரமான மனது உடைந்து உருகி வழிவதைப் போல ஒற்றை வயலின் அதைத் தொடரும். காதலின் தவிப்பைத் துல்லியமாக வெளிப்படுத்தும் விதத்தில் இந்தப்பாடல் அமைந்திருக்கும்.

வெண்ணெல்லோ கோதாரி என்று ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். ஜானகிக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. சருகுகளைச் சுழல வைக்கும் தென்றல், மெல்லிய தூறல், மாலை நேரத்தில் அழகிய பொன் வண்ண மேகங்களின் நகர்வு, திரண்டு வரும் மேகங்களின் உரசல்கள், கண்ணைப் பறிக்கும் மின்னல் என விவரிக்கப்பட்ட காட்சிகளுக்கு உயிர் தருகிறது இளையராஜாவின் இன்னிசை.

பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் தான் அது. பாடலின் தொடங்கத்தில் வரும் இசை தான் நமக்கு இவ்வளவு விவரங்களையும் சொல்லிவிட்டுப் போகிறது.

பாடலின் முதல் ஸ்டேன்ஷாவில் வயலின் சிணுங்குகிறது. அதன் முடிவில் திருமண மேளதாளம் முழங்குகிறது. பாடலின் சூழலுக்கு ஏற்ற வகையில் இசையில் ஒலிப்பது ரசிக்க வைக்கிறது. 2வது ஸ்டேன்ஷாவில் வயலினுக்கும், புல்லாங்குழலுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களாக இளையராஜா நமக்கு வழங்கியிருப்பார்.

இளையராஜா, உமா ரமணன் பாடுகையில், அதை ஆமோதிப்பது போல், ம்ம்…என்று தீபன் சக்கரவர்த்தியின் ஹம்மிங் நம்மை எங்கோ கொண்டு போகும். அப்படி ஒரு அபாரமான இசையை இசைக்கருவிகளால் தொடங்கி இருப்பார்.

Ithu oru ponmalai poluthu

பொன் மாலைப் பொழுது என்ற இந்தப் பாடலில் சிறப்பு ஒன்று உண்டு. இது வாழ்க்கையின் சிறப்பை வெகு அழகாக எடுத்துரைக்கிறது. இளம் கவியின் பார்வையில் நகரங்களில் மாலைநேர ரசனை தான் இந்தப் பாடல். கித்தார், வயலின், புல்லாங்குழல் இதற்குத் தான் வேலை. எஸ்.பி.பி. வானமகள் நாணுகிறாள் என்று பாடுகையில் வைரமுத்து மனதில் நின்று விடுகிறார்.

பல்லவியைத் தொடர்ந்து பொன்னிற அடிவானத்தின் அழகையும், அதன் கீழே இயங்கும் பூவுலகையும் பறவைப் பார்வையில் பார்ப்பது போன்ற ஒரு வயலின் இசை. எலெக்ட்ரிக் கித்தார், நினைவுகளின் தொகுப்பைக் கிளறி விடுகிறது. படத்தில் வரும் சந்திரசேகரின் கதாபாத்திரம் இசைக்கலைஞன் என்பதால் ஒற்றை வயலினுக்குப் பிரத்யேகமாக இசை மீட்டியிருப்பார் இளையராஜா.

இந்தப்படத்தின் மற்றும் ஒரு பாடல் துள்ளல் இசை வகையைச் சேர்ந்தது. இசைக்கலைஞன் பீறிட்டு எழுகிறான். எதற்காக என்றால் தன்னை அழுத்திக் கொண்டு இருந்த அவமதிப்புகளையும், தோல்விகளையும் தகர்த்தெறிந்து விட்டு வெற்றியை ருசிக்கிறான். ஆனால் இது நிஜமல்ல.

கனவுலகப் பாடல். அதற்காகவே வயலின் இசை ஆர்ப்பரித்துப் பொங்குவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு அணுவிலும் நரம்பை முறுக்கேற்றும் இசைத்தெறிப்புகள், வெற்றிக்கான கனவுலகில் பயணம் செய்யும் கலைஞனின் மன ஓட்டங்கள் பாடலில் பிரதிபலிக்கின்றன.

Nizhalgal 2

அடிவான சூரியனைத் தான் தொட இத்தனை வேகமாகப் பாய்கிறதோ என்ற அளவில் விரையும் வாகனம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே ஹார்மோ னியத்தில் இருந்து எலெக்ட்ரிக் கித்தாருக்குத் தாவுகிறது இசை. விரலிலும், குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான் என்று இளையராஜா பாடுகையில் இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது.

இந்தப் படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் நிழல்கள் ரவி. இந்தப் படத்திற்குப் பின்னர் படத்தின் பெயரையே தனக்கு அடையாளமாக வைத்துக் கொண்டார்.

Published by
sankaran v

Recent Posts