Ilaiyaraja: தமிழ் சினிமாவிற்கே ஒரு வரப்பிரசாதமாக கிடைத்தவர் இளையராஜா. அன்னக்கிளி படத்தில் தொடங்கி விடுதலை படம் வரை எத்தனையோ புதுமைகளை கொண்டு வந்து ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த சினிமாவிற்கு இவருடைய பங்களிப்பு என்பது மிகப்பெரியது. ரஜினி, கமல் படங்கள் பெரும்பாலும் ஹிட் ஆகியிருக்கிறது என்றால் பின்னணியில் அமைந்த இவருடைய இசையும் ஒரு காரணம்.
80ஸ் கிட்ஸ் மட்டுமில்லாமல் 2கே கிட்ஸ்களும் இளையராஜா இசைக்கு அடிமை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மேஜிக் இவரது இசையில் காலங்காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இளையராஜா பற்றி பாரதிராஜாவின் சகோதரரான ஜெயராஜ் சில விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதாவது பாரதிராஜா குடும்பமும் இளையராஜா குடும்பமும் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கி பழகி வந்தவர்கள்.
அதனால் இவர்களுக்குள் இருக்கும் நட்பு என்பது வார்த்தையில் சொல்ல முடியாதது. இளையராஜா முதன் முதலில் அன்னக்கிளி படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்போது அந்தப் படத்தை பாரதிராஜா , ஜெயராஜ் மற்றும் இவரது அண்ணி என பார்க்க போயிருக்கின்றனர். படத்தை பார்த்ததும் ஜெயராஜ் இளையராஜாவிடம் படம் கண்டிப்பாக 50 நாள்கள் ஓடும் என்று கூறினாராம்.
ஆனால் இளையராஜாவுக்கு அதில் நம்பிக்கையே இல்லையாம். எனக்காக சொல்லாதே என்று சொல்லியிருக்கிறார். ஜெயராஜ் சொன்னதை போல படம் 50 நாள்களை கடந்து ஓடிய போது இளையராஜாவை போய் பார்த்திருக்கிறார். இவரை பார்த்ததும் இளையராஜாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லையாம். இப்படி 100 நாள்கள், 150 நாள்கள், 175 நாள்களும் ஓடிய போது ஒவ்வொரு முறையும் ஜெயராஜ் இளையராஜாவை சந்தித்து ‘இப்போ என்ன சொல்றீங்க’ என்று நக்கலடித்த படியே கேட்டிருக்கிறார்.

இதே மாதிரி 16 வயதினிலே படத்தை டபுள் பாசிட்டிவில் போய் பார்த்திருக்கிறார்கள். பார்த்துவிட்டு இளையராஜா தன் காரில் ஜெயராஜை அழைத்துக் கொண்டு வந்தாராம். அப்போது ஜெயராஜ் ‘அண்ணே இந்தப் படத்தில் சில இடங்களில் லேக் இருக்கிறது’ என்று சொன்னவுடன் இளையராஜா முகத்தை கடுமையாக வைத்துவிட்டு ‘உடனே இறங்கு’ என சொல்லி ஜெயராஜை காரில் இருந்து இறக்கிவிட்டாராம்.
அங்கு இருந்து ஜெயராஜ் நடந்தே சென்றாராம். அதன் பின் ஃபர்ஸ்ட் காபியில் பார்க்கும் போது 16 வயதினிலே படம் இளையராஜாவின் பின்னணி இசையில் தாறுமாறாக இருந்திருக்கிறது. உடனே இளையராஜாவிடம் சென்று ‘என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணே. அன்றைக்கு பின்னணி இசையில்லாமல் பார்த்ததினால் அப்படி சொல்லிவிட்டேன். ஆனால் படம் சூப்பர்’ என்று சொன்னாராம்.