Cinema History
மீண்டும் 80களுக்கு அழைத்துச் செல்லும் இளையராஜா…… இது எந்தப் படத்தில் தெரியுமா?
80 வயதிலும் இளமை துள்ளலுடன் இளையராஜா இசை அமைத்து வருகிறார் என்றால் ஆச்சரியம் தான். தற்போது அவர் இசை அமைத்துள்ள படம் வட்டார வழக்கு. இது தென்மாவட்டங்களில் 80களில் நடக்கக்கூடிய ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு வருகிறது. கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.
வட்டாரத்தில் நடக்கக்கூடிய வழக்கு என்பதால் இந்தப் பெயரை இயக்குனர் வைத்துள்ளாராம். பிற்காலத்தில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வழக்கமான பழிவாங்கும் கதை தான் என்றாலும் இந்தப் படத்தில் பெரும்பாலான கேரக்டர்களுக்கு அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களையே நடிக்க வைத்து விட்டாராம் இயக்குனர். அது படத்தை இன்னும் மண்ணின் மணம் மாறாமல் மெருகூட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப்படத்திற்காக இசைஞானி கிட்டத்தட்ட ஃப்ரீயாகவே இசை அமைத்துள்ளாராம். புது இயக்குனரைக் கைதூக்கி விட வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தில் சிறப்பாக இசை அமைத்துள்ளாராம் இளையராஜா.
இந்தப்படத்திற்காக முதலில் இளையராஜாவை பின்னணி இசைக்காக மட்டுமே கேட்டார்களாம். அவரே விருப்பப்பட்டுத் தான் 2 பாடல்களுக்கு இசை அமைத்துக் கொடுத்தாராம். ரவீனா ரவி, சந்தோஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவீனா ரவி லவ் டுடே, மாமன்னன் போன்ற படங்களில் நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திலும் டீச்சராக வந்து அசத்தியுள்ளார்.
தைமாசம் பிறந்தாலே கரும்பும், பொங்கலும் தான் நம் நினைவுக்கு வரும். தை பிறந்தாள் இன்று தத்தி வா வா கிளியே… ஒய்யாரம் கொண்டு இசை பாடிடு கிளியே என பல்லவி தொடங்குகிறது.ஜின்ஜின்ஜினா தின் ராகத்திலே தாளமிடு… ஜின் ஜின் ஜினாதின் வாசலிலே கோலமிடு. கரும்பாலே தெருவெங்கும் திருத்தேரத் தோரணங்கள்…. திருமகளும் அடியெடுப்பாள் வரவேற்றிடுங்கள்… என்று பல்லவியைப் போட்டு இருப்பார்.
முதல்பாதியில் புல்லாங்குழல் ஜாலம் பண்ணியிருப்பார். பறவைகள் பறப்பது போன்ற உணர்வை இசையில் சிறப்பாகக் கொண்டு வந்திருப்பார். 2வது பகுதியில் செலோ ஸ்ட்ரிங்ஸ் கருவியின் இசை ஜாலம் இருக்கும். 80களில் பாடல் கேட்டவர்களுக்கு இந்தப் பாடல் ரொம்பவே வரப்பிரசாதமாக அமையும். இந்தப்படம் வரும் டிசம்பர் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும் சினிமா விமர்சகருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.