ராஜா இசையில் பவதாரிணி பாடிய அந்த பாடல்!.. கேட்டாலே மனசு ரம்மியம் ஆயிடும்!..
இளையராஜாவின் இன்னிசை என்றாலே பாடல்கள் எல்லாமே தேனாறு தான். அவருடன் அவரது அன்பு மகளான பவதாரணியின் குரலும் இணைந்து விட்டால் அந்த இசையைக் கேட்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட அற்புதமான பாடல் தான் இது.
தேவயாணி நடித்த படம் செந்தூரம். இளையராஜாவின் இசையில் இந்தப் படத்தில் ஆலமரம், மேலமரும் பச்சைப்பசுங்கிளியே... என்ற பாடல் கேட்பதற்கு ரொம்பவே இனிமையாக இருக்கும். உன்னிகிருஷ்ணனுடன் இணைந்து பவதாரணி அழகாகப் பாடியுள்ளார். மிகவும் அழகான மெலடி பாடல். புலவர் புலமைப்பித்தன் எழுதியுள்ளார். சலவைத் தொழிலாளர்கள் துணியை வெளுக்கப் போகும்போது தங்கள் பிரச்சனைகள் எல்லாவற்றையும் சொல்லி இயற்கை அழகை ரசித்தபடி பாடும் பாடல்.
பஞ்சப்பரம்பரை நாங்க, நாம அஞ்சிக் கெடப்பது ஏங்க? நாளை நமக்குள்ள காலம் அது நம்மை விட்டு எங்கே போகும் இப்படி சலவைத் தொழிலாளர்களது பிரச்சனை மற்றும் நம்பிக்கையையும் பாடலில் திணித்துள்ளார் கவிஞர்.
பாடலின் முதலில் புல்லாங்குழலும், பியானோவும் போட்டி போட்டு இசை எழுப்பும். செனாய் கருவியும் தன் பங்கிற்கு லயமாக இசைக்கும். சரணம் ஆரம்பிக்கும் போது ஆலாபனையும், கோரஸ்சும் இணைந்து அருமையாக வரும்.
ஆத்து மேல ஏறி மேகத்தை எல்லாம் தாண்டி எங்கே போறே சொல்லு. நாங்களும் வாரோம் நில்லு என கிளியிடம் கவிஞர் பேசியிருப்பார். ஆகாயத்தில் பறக்க முடியாத ஏக்கத்தையும் கவிஞர் அழகாகப் பாடலில் சொல்லி இருப்பார். ஊரு அழுக்குகள் நீங்க, இந்த ஆற்றில் வெளுக்கிற நாங்க, எங்களைப் போல அந்த வானம் வெளுப்பது இல்லைன்னு அழகாக எழுதியிருப்பார் கவிஞர். இப்படியே இந்தப் பாடலை ரசித்துக் கொண்டே போகலாம்.
அதே பாடலில் கிளியிடம் இப்படி சொல்கிறார். மேல பறக்கும் நீயும் கொஞ்சம் கீழே பாத்துக்கோ, இல்ல கீழ இருக்கும் எங்கள கொஞ்சம் மேல கூட்டிக்கோ... என்ன அழகான வரிகள். இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் அதன் ரம்மியத்தை நம்மால் உணர முடியும்.