Cinema History
அந்த விஷயத்தில் கில்லாடி இளையராஜாதான்… அவரை அடிச்சிக்க ஆளே இல்லை..!
இளையராஜாவின் இன்னிசையில் தமிழ்ப்படப் பாடல்கள் நமக்கு தேனாறாக இன்னும் காதுகளில் பாய்ந்து கொண்டே இருக்கிறது. இவரது பாடல்களில் பெரும்பாலானவை கிராமிய மணம் கமழும் வகையில் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
80களில் இளையராஜாவின் பாடல்கள் என்றால் நமக்கு தெவிட்டாத தேனமுதம் தான். அப்போது கிராமப்புறங்களில் எல்லாம் மச்சானைப் பார்த்தீங்களா என்று ஜானகியின் குரலில் பாடல் ஒலிக்கும்போது நமக்குள் இருக்கும் இசை உணர்வு விழித்தெழுகிறது. அவரது முதல் படமான அன்னக்கிளி படத்திலேயே அப்படி ஒரு இனிமை நம்மை எங்கோ கொண்டு போய் சென்று விடுகிறது.
அடுத்து ஒரு பாடல் அதே படத்தில் என்ன அழகாக டியூன் போட்டுள்ளார் இளையராஜா. அடி ராக்காயி மூக்காயி குப்பாயி என்று ஆரம்பிக்கும் பாடலில் ‘சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்’ என்ற பாடல் நம்மை தாளம் போட வைக்கிறது. பாடல் முழுவதும் கிராமிய மணம் கமழுகிறது.
16 வயதினிலே பாடலை எடுத்துக் கொண்டால், செந்தூரப்பூவே பாடல் நம்மை தென்றல் போலத் தாலாட்டுகிறது. அதே படத்தில் சோளம் விதைக்கையிலே பாடல் மண்ணின் மணத்தை ரம்மியமாகப் பரப்புகிறது. ஆறிலிருந்து 60 வரை படத்தில் வரும் கண்மணியே காதல் என்பது பாடல் நமக்கு காதலின் புது இலக்கணத்தையே சொல்லித் தருகிறது.
பத்ரகாளி படத்தில் வரும் ‘கேட்டேளா அங்கே வாங்கோன்னா’ என்ற துள்ளல் இசைப்பாடல் நம் மனதைத் துள்ளச் செய்கிறது. அதே படத்தில் ஒரு மெலடி பாடல் வருகிறது. கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற இந்தப் பாடல் அப்போதைய வானொலிகளில் கேட்காத நாளே இல்லை எனலாம்.
மூடுபனி படத்தில் ‘ என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடலும், ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் என்னுள்ளே ஏதோ ஏங்கும் கீதம் என்ற பாடலையும் கேட்டால் போதும். அக்காலத்தில் எப்போதும் ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடலானது.
பகல் நிலவு படத்தில் ஒரு இனிய பாடல். பூமாலையே தோள் சேரவா பாடலில் இளையராஜா ஒரு புதுமை செய்து இருப்பார். ஒரே நேரத்தில் இருவரும் அற்புதமாகப் பாடியதை இணைத்திருக்கும் இந்த இசை கேட்டால் ரொம்பவே சூப்பராக இருக்கும். அதாவது ஒருவர் பின்னணியில் பாடிக்கொண்டே இருப்பார். அவர் முடிப்பதற்குள் இன்னொருவர் பாட ஆரம்பித்துவிடுவார். சுகமான பாடல் அது. இளையராஜாவும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய இந்தப் பாடலில் அசத்தாலாகப் பாடியிருப்பார்கள்.
தர்மயுத்தம் படத்தில் ஆகாய கங்கை பாடல் அதி அற்புதமாக இருக்கும். புதிய வார்ப்புகள் படத்தில் ஜென்சி சுலோச்சனாவின் குரலில் தம்தன நம்தன தாளம் வரும் பாடல் இசையுடனே பயணிக்கும் அற்புதத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
பல்லவிக்கும், சரணத்திற்கும் இடையில் ஒருவித இசைக்கோர்வையை இளையராஜா சேர்ப்பார். அது போல இசையை வேறு எங்கும் கேட்க முடியாது. உதாரணத்திற்கு காயத்ரி படத்தில் வாழ்வே மாயமா என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். கோழி கூவுது படத்தில் பூவே இளைய பூவே பாடலும் அந்த ரகம் தான்.
இளையராஜாவின் கிராமியப் பாடல்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம். அவரே கிராமிய சூழலில் வளர்ந்தவர் என்பதால் அந்த இசை அவருக்கு அத்துப்படி என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா என்று பாடியுள்ளார்.