ரஜினி சொன்னா வாய்ப்பு கொடுக்கணுமா?!... கடுப்பாகி பிரபலத்தை பழிவாங்கிய இளையராஜா!..
திரையுலகில் இசைஞானியாக வலம் வருபவர் இளையராஜா. இசைஞானம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதேபோல அவருக்கு கோபமும் வரும். ஆனாலும், அவரை விட்டால் வேறு ஆளில்லை என்பதால் திரையுலகினர் அவரின் கோபத்தை பொறுத்துக்கொண்டனர். ஏனெனில், அவர் இசையமைத்தால்தான் படம் ஓடும் என்கிற நிலையை அவரின் பாடல்கள் உருவாக்கி வைத்திருந்தது. பல படங்களை தனது இசையால் காப்பாற்றினார். அதனால்தான் அவரின் கண் அசைவுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்திருந்தனர்.
அதேபோல், அவரின் இசைக்கு யார் பாடல் எழுத வேண்டும் என்பதையும் அவரே தீர்மானித்தார். ரஜினி நடித்து 1989ம் வருடம் வெளியான திரைப்படம் ராஜாதி ராஜா. இப்படத்தில் ‘மீனம்மா மீனம்மா’ என்கிற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் பதிவின் போது இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு வந்துள்ளார் ரஜினி.
அந்த பாடலின் வரிகளை கேட்டு ‘மிகவும் அற்புதமாக இருக்கிறது.. யார் எழுதியது?’ என ரஜினி கேட்க பிறைசூடனை அறிமுகம் செய்து ‘இவர்தான் எழுதினார்’ என சொல்ல அவரை பாராட்டிய ரஜினி அருகிலிருந்த இளையராஜவிடம் ‘இவர் நன்றாக பாடல்களை எழுதுகிறார்.. இவரை தொடர்ந்து எழுத வையுங்கள்’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.
இது ராஜாவின் ஈகோவை தொட்டுவிட்டது. ‘என் இசைக்கு யாரை பாடல் எழுத வைக்க வேண்டும் என எனக்கு தெரியாதா?.. ரஜினி சிபாரிசு செய்தால் நான் வாய்ப்பு தரவேண்டுமா’ என நினைத்த இளையராஜா அதன்பின் சில வருடங்கள் அவருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லையாம். இது ஒரு கட்டத்தில் பிறைசூடனுக்கும் தெரிந்துவிட்டது. சில வருடங்கள் கழித்தே பிறைசூடனுக்கு பாட்டெழுத இளையராஜா வாய்ப்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.