தமிழ் சினிமாவில் கிராமத்திய இசையை புகுத்தியவர் இளையராஜாதான். 80களில் பல திரைப்படங்களில் இவரின் இசையை நம்பித்தான் உருவானது. இப்போதும் 70,80 மற்றும் 90 கிட்ஸ்களுக்கு பலருக்கும் பிடித்தமான பாடல் இளையராஜாவின் இசையில் உருவானதுதான். இவர் கொடுத்தது போல் மெலடி பாடல்களை இதுவரை எந்த இசையமைப்பாளரும் கொடுக்கவில்லை.
இளையராஜா கோபக்காரர், திமிர் பிடித்தவர், சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி என திரையுலகில் அவரை பற்றி பல விஷயங்கள் பேசுவார்கள். பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், பல படங்களுக்கு குறைவான சம்பளத்தை வாங்கிக்கொண்டு அவர் இசையமைத்து கொடுத்துள்ளார். அது பலருக்கும் தெரியாது. சில படங்களுக்கு சம்பளமே வாங்கமால் கூட இசையமைத்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு செய்தியைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் பல ஹிட் படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். இவரிடம் உதவியாளராக இருந்த பி.வாசுவும், சந்தானபாரதியும் ஒன்றாக இணைந்து பாரதி வாசு என்கிற பெயரில் இயக்கிய திரைப்படம்தான் பன்னீர் புஷ்பங்கள். இப்படத்தில் பாடல்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இப்படம் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அப்போது இளையராஜா ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். எனவே, அவருக்கே ஒரு லட்சம் போய்விட்டால் படத்தை எப்படி எடுப்பது? இளையராஜா எவ்வளவு சம்பளம் கேட்கப்போகிறார்? என வாசு பயந்துகொண்டே இருந்தாராம்.

பாடல்கள் உருவானபோது ‘அண்ணே உங்கள் சம்பளம் எவ்வளவு என சொல்லுங்கள்.. எனக்கு பயமாக இருக்கிறது’ என ராஜாவிடம் பி.வாசு கேட்டு நச்சரித்துக்கொண்டே இருந்தாராம். ஆனால், இளையராஜா எதுவுமே சொல்லாமல் அப்புறம் பாத்துக்கலாம் என தட்டிக்கழித்துக்கொண்டே வந்தாராம். இறுதியாக பின்னணி இசையும் முடிந்த பின் வாசு அவரிடம் மீண்டும் கேட்க ‘இப்படத்திற்கு நான் இசையமைக்க நீ சம்பளமே கொடுக்க வேண்டாம்’ என சொல்லிவிட்டாராம். ‘முதன் முதலில் படம் எடுக்குறீங்க.. எனக்கு சம்பளம் வேண்டாம்’ என கூறி பி.வாசுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம் இளையாராஜா.

இந்த தகவலை பி.வாசுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் நடிகர் சுரேஷ் (அறிமுகம்), பிரதாப் போத்தன் என பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1981ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு வழியா முடிவுக்கு வந்துருச்சுப்பா!. எச்.வினோத் இயக்கப் போகும் அடுத்த படம்!..
