இந்த பாட்டை இப்படித்தான் பாடுவேன்.. ராஜா செய்த சித்துவேலை.. பாக்கியராஜ் படத்தில் நடந்த காமெடி..

இசையமைப்பாளர்களில் கொஞ்சம் கறாரானவர் இளையராஜா. சில படங்களுக்கு பணமே வாங்காமல் இசையமைத்த அவர்தான் சில படங்களில் ‘இவ்வளவு கொடுத்தால் மட்டுமே இசையமைப்பேன்’ என கறார் காட்டியவர். அதேபோல், பாட்டு வரிகள் அவருக்கு பிடித்திருக்க வேண்டும். அவர் சொல்பவர்தான் பாடலை பாட வேண்டும். தயாரிப்பாளரோ, இயக்குனரோ அதில் தலையிட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும். இது பலமுறை நடந்துள்ளது.

ஏவிஎம் தயாரிப்பில் பாக்கியராஜ் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சி. 1983ம் வருடம் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெள்ளிவிழா படமாகவும் அமைந்தது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்.

munthanai

munthanai

இந்த படத்தின் டைட்டில் கார்ட் வரும்போது ‘விளக்கு வச்ச நேரத்திலே’ என்கிற பாடல் வரும். இந்த பாடலை இளையராஜாவும், எஸ்.ஜானகியும் பாடியிருந்தார்கள். இந்த பாடல் ‘வெளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான், மறைஞ்சி நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்’ என பாடல் வரி துவங்கும்.

இந்த பாடலை பாடும்போது இளையராஜா மாலை போட்டிருந்தார். எனவே, பாக்கியராஜிடம் பாடல் வரிகளை மாற்ற சொன்னார். ஆனால், அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, வேண்டா வெறுப்பாக அந்த பாடலை பாடிய ராஜா ‘வெளக்கு வெச்ச நேரத்திலே தந்தானன்னா, மறைஞ்சி நின்னு பார்க்கையிலே தரனானன்னா’ என பாடியிருப்பார்.

பாக்கியராஜிடம் இந்த பாடலை போட்டு காட்டும்போது ‘பாடல் வரிகள் எனக்கு மறந்துவிட்டது. வேண்டுனால் மீண்டும் பாடித்தருகிறேன்’ என ராஜா சொல்ல ‘இல்லை தேவையில்லை. நான் எதிர்பார்த்ததை விட பாடல் நன்றாக வந்திருக்கிறது. சொல்லாத வார்த்தைக்கு அர்த்தம் அதிகம். அது அப்படியே இருக்கட்டும்’ என பாக்கியராஜ் சொல்லிவிட்டாராம்.

இதை நினைத்துக்கொண்டு அந்த பாடலை கேட்டால் இப்போது சிரிப்புதான் வருகிறது.

 

Related Articles

Next Story