Cinema News
பாடகர் எஸ்.பி.பி பிறந்தநாள் இன்று!.. ஒரு வரியில் இளையராஜா போட்ட நெகிழ்ச்சி பதிவு!..
இசைஞானி இளையராஜாவும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் இளையராஜா ‘அன்னக்கிளி’ படத்தில் அறிமுகமாவதற்கு 7 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் பாட வந்துவிட்டார் எஸ்.பி.பி. எம்.எஸ்.வியின் இசையில் சில ஹிட் பாடல்களை பாடியிருந்தார்.
ஆனால், இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாட துவங்கியதுதான் அவரின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இருவரும் இணைந்து அவ்வளவு இனிமையான பாடல்களை ரசிகரக்ளுக்கு கொடுத்தனர். இளையராஜா – எஸ்.பி.பி – ஜானகி இணைந்ததால் தித்திக்கும் தேனமுதாக பாடல்கள் வெளிவந்தது.
80களில் ரஜினி, கமல், மோகன் என பலருக்கும் மனதை மயக்கும் பாடல்களை இருவரும் கொடுத்தனர். ஜானகியுடன் மட்டுமில்லாமல் சின்னக்குயில் சித்ராவுடன் இணைந்தும் பல நூறு பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. குறிப்பாக மோகனுக்கு தனியாக எஸ்.பி.பி மட்டும் பாடிய பல பாடல்கள் 80 கிட்ஸ்களுக்கு பிடித்தமான பாடல்களாக இப்போதும் இருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான், தேவா ஆகியோரின் வரவுக்கு பின் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி பாடுவது குறைந்து போனது. ஒருபக்கம் எல்லா நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் இளையராஜா சண்டை போட்டதால் அவர் இசையமைக்கும் படங்களும் குறைந்துபோனது. ஒருபக்கம், தனது பாடல்களை தனது அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என கொடி பிடித்தார் இளையராஜா.
அவரின் நெருக்கமான நண்பர் எஸ்.பி.பி-க்கும் நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இதனால் வேதனை அடைந்தார் எஸ்.பி.பி. ஆனால், அதே எஸ்.பி.பி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ‘சீக்கிரம் வா பாலு. உனக்கு எதுவும் ஆகாது’ என இளையராஜா வீடியோ வெளியிட்டார்.
ஜுன் 4ம் தேதி இன்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்தநாளாகும். எனவே, அவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இதை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என்றும் என் நினைவில் பாலு. Miss you’ என பதிவிட்டி நண்பருக்காக உருகியுள்ளார்.