நடக்கப்போகும் சம்பவங்களை முன்பே கணித்த திரைப்படங்கள்… ஒரே திகிலா இருக்கேப்பா!!
ஒரு இயக்குனர் சில புதுமையான விஷயங்களை அவரது திரைப்படத்தில் புகுத்த வேண்டும் என்று நினைத்து சில சம்பவங்களை எழுதிவிடுவார். ஆனால் அச்சம்பவங்கள் திடீரென உண்மையில் நடந்துவிடும்.
அமெரிக்காவில் வெளிவந்த “தி சிம்ப்சன்ஸ்” என்ற அனிமேஷன் தொலைக்காட்சி தொடரை இதற்கு உதாரணமாக கூறலாம். கமலா ஹாரீஸ் போலவே இருக்கும் ஒரு நபர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக ஆவது போல் ஒரு காட்சி அத்தொடரில் இடம்பெற்றிருந்தது.
அதில் வருவது போலவே கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஆகிவிட்டார். “தி சிம்ப்சன்ஸ்” தொலைக்காட்சித் தொடர் 1980களில் ஒளிபரப்பானது. கமலா ஹாரீஸ் துணை ஜனாதிபதியாக ஆனபோது இணையத்தில் பலரும் “தி சிம்ப்சன்ஸ்” தொடரில் இடம்பெற்ற அந்த குறிப்பிட்ட காட்சியை இணையத்தில் வைரல் ஆக்கினார்கள். இது தற்செயலாக இருந்தாலும் இதனை காண்பவர்களுக்கு நிச்சயமாக அதிர்ச்சிக்குரிய ஒன்றாகவே இருக்கும்.
இதே போல் பிற்காலத்தில் நடந்ததை முன் கூட்டியே சொன்ன திரைப்படங்கள் தமிழிலும் வெளிவந்திருக்கின்றன. அத்திரைப்படங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
தசாவதாரம்
கடந்த 2008 ஆம் ஆண்டு கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் தசாவதாரம். இத்திரைப்படத்தில் அவர் ஒரு கிருமி வெளியே கசிந்துவிடக் கூடாது என்று பாதுகாத்துக்கொண்டே வருவார். அந்த கிருமி வெளியே வந்தால் “எபோலா” வைரஸ் பரவிவிடும் என அத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு வசனம் பேசுவார்.
இதனை தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டுதான் முதலில் இந்தியாவிற்கு எபோலா வைரஸ் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கமல்ஹாசன் முன்கூட்டியே எபோலா வைரஸ் குறித்து கணித்திருக்கிறார்.
காப்பான்
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “காப்பான்”. இத்திரைப்படத்தில் இரண்டு சம்பவங்கள் முன் கூட்டியே சொல்லப்பட்டிருந்தது. அதாவது இதில் ஆர்யா பிரதமர் ஆனவுடன் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவிப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படம் வெளிவந்து 5 மாதங்களுக்கு பிறகு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவித்தார்.
அதே போல் இத்திரைப்படத்தில் வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இத்திரைப்படம் வெளியானதற்கு அடுத்த ஆண்டில், அதாவது ஜூன் மாதம் 2020 ஆம் ஆண்டில் பல வட மாநிலங்களில் வெட்டுக்கிளி தாக்குதல் நடந்து பல பயிர்கள் நாசமடைந்தன. எனினும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் இது போன்ற வெட்டுக்கிளி தாக்குதல் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி தி பாஸ்
கடந்த 2007 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “சிவாஜி தி பாஸ்” திரைப்படத்தில், வருங்காலத்தில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க 500-1000 ரூபாய் நோட்டுகளை அரசு ஒழிப்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இது போன்ற ஒரு காட்சி 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான “பிச்சைக்காரன்” திரைப்படத்திலும் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய அரசு 500-1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. இதனை முன்பே கணித்திருக்கிறார் ஷங்கர்.
இதையும் படிங்க: சிறு வயதில் தந்தை கொடுத்த பாலியல் தொல்லை… குஷ்பு பகிர்ந்த ஷாக் தகவல்..