ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்!. ரெண்டுமே சூப்பர் ஹிட்!.. கெத்து காட்டிய நடிகர் திலகம்…

EVS
தமிழ்த்திரை உலகில் ஒரே நாளில் ஒரே நடிகரின் இரு படங்கள் ரிலீஸானவை பல உள்ளன. இன்னும் சொல்லப் போனால் நடிகர் மோகனுக்கு எல்லாம் 3 படங்கள் கூட ஒரே நாளில் ரிலீஸாகியுள்ளன. ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் நடிகர் திலகம் தான். அது என்னென்ன படங்கள், எப்போது ரிலீஸானது என்று பார்ப்போமா...
1970 ம் ஆண்டில் தீபாவளி அக்டோபர் 29ல் நடிகர் திலகம் சிவாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படம் ரிலீஸானது. அதே நாளில் சிவாஜிக்கு இன்னொரு படமும் வந்தது. அதுதான் சொர்க்கம். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து கே.ஆர்.விஜயாவும், கே.பாலாஜியும் நடித்து இருந்தனர்.
டி.ஆர்.ராமண்ணா இயக்கிய படம். இந்தப் படத்தில் சிவாஜியின் ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்துள்ளார். எம்.எஸ்.வி.யின் இசையில் பொன்மகள் வந்தாள், அழகு முகம், சொல்லாதே யாரும், ஒரு முத்தாரத்தில் ஆகிய பாடல்கள் முத்திரை பதித்தன.
தமிழ்த்திரை உலக வரலாற்றிலேயே இப்படி ஒரே நாளில் ஒரே நடிகரின் இரு படங்கள் வெளியானதே இல்லை. இதுதான் முதல் தடவை. அந்தப் புகழும் நடிகர் திலகத்திற்கே கிடைத்துள்ளது. 2 படங்களும் ஒரே நாளில் வெளியானதால் தயாரிப்பாளர்களுக்கு படம் ஓடுமா, ஓடாதா என்று கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால் இந்த 2 படங்களுமே வெற்றி வாகை சூடின.

Enkiruntho Vanthaal
எங்கிருந்தோ வந்தாள் படம் வெளியாகி 53 ஆண்டுகளாகி விட்டன. இன்றும் இந்தப் படத்தைப் பார்த்தால் ப்ரஷ்ஷாக இருக்கும். படம் வந்த புதிதில் படத்தில் ஹீரோயினாக நடித்த ஜெயலலிதாவைப் பாராட்டாத பத்திரிகைகளே இல்லை எனலாம். படம் வெற்றிவிழா, வெள்ளி விழா என பல சாதனைகளைப் படைத்தது.
கே.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரித்தது. இசையை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. கவனித்துக் கொண்டார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். எல்லாப் பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்தப் படத்தை நடிகர் திலகம் சிவாஜியின் அபிமான இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கியுள்ளார். பாடல்களை டி.எம்.எஸ். தன் வெண்கலக்குரலால் பாடி அழகு சேர்த்துள்ளார்.
ஒரே பாடல் உன்னை அழைக்கும், வந்தவர்கள் வாழ்க, நான் உன்னை அழைக்கவில்லை, சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே என இந்தப் பாடல்களை எல்லாம் இப்போது கேட்டாலும் நாம் மெய்மறந்து ரசித்துக் கொண்டே இருப்போம். அவ்வளவும் வசீகரமானது.