தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த விஜயகாந்த்தை பலரும் “வள்ளல்” என பாராட்டுவதை நாம் பார்த்திருப்போம். அது வெறும் வாய்ஜாலத்திற்காக கூறப்படுவது அல்ல.
உதவி என்று யார் வந்து கேட்டாலும், அவருக்கு என்னவேண்டும், ஏது வேண்டும் என தெளிவாக கேட்டு அவருக்கு தேவையானதை செய்த பின்தான் மறுவேலை பார்ப்பார் விஜயகாந்த். குறிப்பாக ஒருவருக்கு உணவில்லை என்றால் விஜயகாந்த் பொறுத்துக்கொள்ளவே மாட்டார். அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் எப்போது போனாலும் வயிறு நிறைய சாப்பாடு போட்டுத்தான் அனுப்புவார் என பலரும் கூறுவர்.
இதனிடையே விஜயகாந்த் எந்த அளவுக்கு உதவும் மனப்பான்மை உடையவர் என்பதை உண்மையில் நடந்த ஒரு சம்பவம் மூலமாக பார்க்கலாம். விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது சங்கத்தின் கடனை அடைப்பதற்கு பல ஊர்களில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது ஒரு நாள் மதுரையில் கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு ரயிலில் சக கலைஞர்களுடன் திரும்பி வந்தபோது யாருமே சாப்பிடவில்லை என தெரியவந்திருக்கிறது.
இதனை அறிந்த பின் ரயிலின் செயினை பிடித்து நிறுத்திய விஜயகாந்த், கீழே இறங்கி தூரத்தில் நடந்து சென்று ஒரு ஹோட்டல் கடையை கண்டுபிடித்து அந்த ஹோட்டலில் உள்ள அனைத்தையும் வாங்கிவந்தாராம். இது போல் பல சம்பவங்களை நாம் அறியலாம்.
இந்த நிலையில் ஒரு நாள் விஜயகாந்த் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்திருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீண்டிருக்கிறது. இரவு சோதனையின் முடிவில் ரெய்டுக்கு வந்த தலைமை அதிகாரி விஜயகாந்த்தை பார்த்து என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
“சார், உங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. இது எங்கள் கடமை. உங்களது ரெக்கார்டுகளை எல்லாம் பார்க்கும்போது நீங்கள் எவ்வளவோ நல்லது செய்திருக்கிறீர்கள் என தெரியவருகிறது. நல்லது செய்வதை மட்டும் எப்போதும் நிறுத்திவிடாதீர்கள்” என கூறியிருக்கிறார்.
ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரியே விஜயகாந்துக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள செய்தி ரசிகர்களிடையே மிகவும் நெகிழ்ச்சி நிறைந்த சம்பவமாக அமைந்துள்ளது.