“தங்கலான்” வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தமா?? டைட்டிலுக்குள் இருக்கும் சுவாரஸ்ய பின்னணி…
பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இதில் சீயான் விக்ரமுடன் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கோலார் தங்க வயலில் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் “தங்கலான்” திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் மட்டுமல்லாது பார்வதி, பசுபதி ஆகியோரின் தோற்றங்களும் வித்தியாசமாக இருக்கிறது.
பா.ரஞ்சித் திரைப்படங்களில் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பின்னணியிலேயே கதையம்சம் அமையும். அவர் இயக்கிய “மெட்ராஸ்” திரைப்படம் வடச்சென்னை பகுதியில் நிலவும் அரசியலை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய “கபாலி”, “காலா”, “சார்பட்டா பரம்பரை”, “நட்சத்திரம் நகர்கிறது” போன்ற திரைப்படங்களிலும் அவரது பாணியிலான அரசியலே இடம்பெற்றிருக்கும்.
“தங்கலான்” திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. கே ஜி எஃப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் அங்கே இருந்த ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தை பற்றிய கதையை தழுவித்தான் “தங்கலான்” திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் “தங்கலான்” என்ற டைட்டிலின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவல் ஒன்றை மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரில் உள்ள ஊர்க்காவலர்களை குறிக்கும் சொல்தான் “தங்கலான்” என அவர் கூறியுள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து எடுக்கப்படுவதுதான் “தங்கலான்” திரைப்படம். ஆதலால்தான் “தங்கலான்” என டைட்டில் வைத்துள்ளதாக பலரும் கூறி வந்தனர்.
ஆனால் “தங்கலான்” டைட்டிலுக்குப் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை பார்க்கும்போது பா.ரஞ்சித்தின் அரசியல், திரைப்படத்தின் டைட்டிலிலேயே தென்பட்டுவிடுகிறது.
“தங்கலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இத்திரைப்படம் வெளிவரும் என கூறப்படுகிறது.