முதல் படத்திலேயே மாநில விருது… கல்லூரி ஆசிரியர் டூ இயற்கை விவசாயி… நடிகர் கிஷோரின் ஆச்சரியமூட்டும் பல முகங்கள்…

Kishore
தமிழில் சமீப காலத்தில் முன்னணி வில்லன் நடிகராக திகழ்ந்து வருபவர் கிஷோர். வில்லனாக மட்டுமல்லாது சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் கூட ரவிதாசன் கதாப்பாத்திரத்தில் மிரட்டி எடுத்திருந்தார் கிஷோர். தனது தனித்துவமான நடிப்பால் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் கிஷோர், தனது முதல் படத்திலேயே மாநில விருது வாங்கியவர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

Kishore
நடிகர் கிஷோர் கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்” என்ற திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார். ஆனால் கடந்த 2004 ஆம் ஆண்டே “கன்டி” என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமாவிட்டார் கிஷோர். இத்திரைப்படத்திற்காக கிஷோர் கர்நாடக அரசின் சிறந்த துணைக்கதாப்பாத்திரத்திற்கான விருதை பெற்றார்.
அதனை தொடர்ந்து அவர் நடித்த இரண்டாவது திரைப்படமான “ராக்சஷா” திரைப்படத்திற்காகவும் கர்நாடக அரசின் விருதை பெற்றார். இவ்வாறு தனது சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்திலேயே இரண்டு மாநில விருதுகளை பெற்றவர் கிஷோர்.
கர்நாடகாவின் சன்னப்பட்னா என்ற சிறிய ஊரில் பிறந்த கிஷோர், தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பெங்கலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டம் படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மேடை நாடகங்களில் அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. எனினும் தனது மேற்படிப்பை முடித்த பிறகு அதே கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

Kishore
அதன் பிறகு ஆடை வடிவமைப்பாளர் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்தார் கிஷோர். மேலும் பல பிரபலமான பத்திரிக்கைகளில் செய்தித்தாள் விற்பனையாளராகவும் பணியாற்றினார்.
தனது முதல் திரைப்படமான “கன்டா” திரைப்படத்தில் கிஷோர் முதலில் ஆடை வடிவமைப்பாளராகத்தான் வேலை செய்தார். அவரின் தோற்றத்தை பார்த்த இயக்குனர் அவருக்கு நடிகராகும் வாய்ப்பை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறன் “பொல்லாதவன்” திரைப்படத்திற்கு முன்பு “தேசிய நெடுஞ்சாலை” என்ற திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. அத்திரைப்படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் கிஷோர்தான். ஆனால் அத்திரைப்படம் சில காரணங்களால் முடங்கிப்போனது. அதனை தொடர்ந்துதான் “பொல்லாதவன்” திரைப்படத்தில் கிஷோர் நடித்தார்.

Kishore
(வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த “தேசிய நெடுஞ்சாலை” கதைதான் பின்னாளில் “உதயம் என்.ஹெச்.4” என்ற திரைப்படமாக உருவானது என்பது கூடுதல் தகவல்)
கிஷோர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும், ஒரு பக்கம் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்துகொண்டிருக்கிறார். தனது கடைசி காலத்தில் முழு நேர விவசாயியாக ஆகவேண்டும் என்பதுதான் கிஷோரின் வாழ்நாள் ஆசையாம்.