தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றி இயக்குனராகவும், சிறந்த நடிகராகவும் திகழுந்து வருபவர் சமுத்திரக்கனி. “நாடோடிகள்”, “போராளிகள்”, “நிமிர்ந்து நில்”, “நாடோடிகள் 2” போன்ற பல திரைப்படங்களை இயக்கிய சமுத்திரக்கனி, தமிழின் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அசுரத்தனமான வில்லன் நடிகராகவும் அசத்தி வருகிறார் சமுத்திரக்கனி. இந்த நிலையில் சினிமாவில் சமுத்திரக்கனி கடந்து வந்த பாதையில் அவருக்கு நடந்த பல சுவாரஸிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

சமுத்திரக்கனி தனது பள்ளி படிக்கும் வயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையிடம் பள்ளிக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சினிமாவிற்கு சென்றுவிடுவார் சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் இவரது ஆர்வத்தை புரிந்துகொண்ட தந்தை, “படிப்பை முடித்துவிட்டு உனக்கு பிடித்ததை செய்” என கூறியிருக்கிறார்.
ஆனால் சில நாட்களிலேயே அவரது தந்தை இறந்துவிடுகிறார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அவரது தாயிடம் அனுமதியும் பெற்று சென்னைக்கு வண்டி ஏறுகிறார் சமுத்திரக்கனி.

சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேட முடிவெடுக்கும் சமுத்திரக்கனி, தன்னை விதமாக விதமாக படம்பிடித்து பல இயக்குனர்களை சந்திக்கிறார். ஒரு தருணத்தில் இருக்குனர் சுந்தர் கே விஜயனிடம் வாய்ப்பு கேட்க செல்கிறார். ஃபோட்டோ ஆல்பத்தில் சமுத்திரக்கனியின் கையெழுத்தை பார்த்த அவர் “நடிப்புக்கு இப்போதைக்கு என்னிடம் வாய்ப்பில்லை, உன்னுடைய கையெழுத்து நன்றாக இருக்கிறது. என்னிடம் எழுத்து வேலை பார்க்கிறாயா” என கேட்கிறார். இப்படித்தான் சமுத்திரக்கனி சினிமாவிற்குள் நுழைந்தார்.
சுந்தர் கே விஜயனிடம் வேலைக்குச் சேர்ந்த சமுத்திரக்கனிக்கு வருமானம் பத்தவில்லை. ஆதலால் பல உதவி இயக்குனர்களுடன் சேர்ந்து கேட்டரிங் சர்வீஸ் வேலைக்கும் செல்கிறார். இப்படி வாழ்க்கை போய்க்கொண்டிருக்க அந்த நேரத்தில்தான் கே பாலச்சந்தர் ஒரு சீரியலை இயக்கிக்கொண்டிருந்தார்.

கே. பாலச்சந்தர் இயக்கிய சீரியலில், சில எபிசோடுகள் மிச்சம் இருக்க, அந்த எபிசோடுகளை இயக்க சுந்தர் கே விஜயனுக்கு வாய்ப்பு வருகிறது. சுந்தர் கே விஜயன் மூலமாக கிடைத்த தொடர்பின் மூலம் பாலசந்தருடன் இணைந்து பயணிக்கிறார் சமுத்திரக்கனி. அதனை தொடர்ந்து அப்போது சீரீயலில் நடித்துக்கொண்டிருந்த எஸ்பிபி சரணுடன் நட்பு ஏற்படுகிறது.
வெகு நாட்கள் கழித்து ஒரு நாள் சமுத்திரக்கனியிடம் “நான் ஒரு திரைப்படம் இயக்கப்போகிறேன். அதனை நீதான் இயக்கவேண்டும்” என கூறுகிறார் சரண். அதனை தொடர்ந்து சில நாட்கள் அப்பணிகளில் சமுத்திரக்கனி ஈடுபட்டார். ஆனால் அந்த முயற்சி கைக்கொடுக்கவில்லை.

அதனை தொடர்ந்து பாலசந்தருடன் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவர் இயக்கிய “பார்த்தாலே பரவசம்” திரைப்படத்தில் ஒரு காட்சியில் சமுத்திரக்கனி நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் எஸ்பிபி சரண், ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்ப, சமுத்திரக்கனி எஸ்பிபி சரணை வைத்தே படம் இயக்கலாம் என முடிவு செய்கிறார். மேலும் எஸ்பிபி சரண் மூலம் வெங்கட் பிரபுவுடன் தொடர்பு கிடைக்கிறது. இதன் பிறகுதான் சமுத்திரக்கனி தனது முதல் திரைப்படமான “உன்னை சரணடைந்தேன்” திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து விஜயகாந்த் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அத்திரைப்படத்தின் கதை வேறொருவருடையது. அப்படி அவர் இயக்கிய “நெறஞ்ச மனசு” திரைப்படம் தோல்வியடைந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் உதவி இயக்குனராக பணிபுரியவேண்டும் என முடிவு செய்த சமுத்திரக்கனி, அமீருடன் “பருத்திவீரன்” திரைப்படத்தில் பணியாற்றுகிறார். அதில் ஒரு காட்சியில் சிறு வேடத்திலும் நடித்திருப்பார். அப்போது சக உதவி இயக்குனராக பணிபுரிந்த சசிகுமாருடன் நட்பு ஏற்படுகிறது.

அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் பல தொடர்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில்தான் சசிகுமார், சமுத்திரக்கனியை தொடர்பு கொண்டு உடனே திண்டுக்கல் வரச் சொல்கிறார்.
இதனிடையே சமுத்திரக்கனிக்கு திருமணமும் ஆகி இருந்தது. அவரது மனைவியிடம் “என்னை இரண்டு வருடங்கள் அப்படியே விட்டுவிடு. நான் சினிமாவில் எப்படியாவது முட்டிமோதிவிட்டு வருகிறேன்” என அனுமதி பெற்றுவிட்டு திண்டுக்கலுக்கு வண்டி ஏறுகிறார்.

அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் “சுப்ரமணியபுரம்”. அத்திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரகனியின் ரேஞ்ச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.