Connect with us
சந்திரபாபு

Cinema History

எம்.ஜி.ஆர் – சந்திரபாபு சண்டை… உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாகக் கலக்கிக் கொண்டிருந்த சமயம் அது. எம்.ஜி.ஆர் படமென்றாலே தயாரிப்பாளர்கள் தொடங்கி விநியோகஸ்தர்கள் வரை லாபம் பார்த்துவிட முடியும் என்று இண்டஸ்ட்ரியில் பேச்சு இருந்தது. இதனால், எம்.ஜி.ஆரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டியே ஏற்பட்டது. அதேபோல், அவரின் படங்களில் எம்.ஜி.ஆர் சொல்வதுதான் சட்டம். திரைத்துறையில் பவர்ஃபுல்லாக இருந்த எம்.ஜி.ஆரைப் பகைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் இருக்க முடியாது என்ற நிலை இருந்தது. பிறவிக் கலைஞரான சந்திரபாபு மட்டும் எம்.ஜி.ஆர் விஷயத்தில் கொஞ்சம் மாறுபட்டவராக இருந்தார்.

எம்.ஜி.ஆர் முன்னணி நாயகனாக நடித்த படங்களில் காமெடியனாக சந்திரபாபு நடித்திருப்பார். தியேட்டர்களில் சந்திரபாபு சீன்களுக்கு விசிலும் கைதட்டலும் அதிகம் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவல் விநியோகஸ்தர்கள் மூலம் எம்.ஜி.ஆர் காதுகளுக்கும் போயிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகியிருக்கிறது. `என்னடா இது, படத்துடைய ஹீரோவான நம்மை விட காமெடியனுக்கு இவ்வளவு வரவேற்பா?’ என்ற ஈகோ எம்.ஜி.ஆருக்கு எட்டிப்பார்த்ததாகச் சொல்வார்கள். அதேபோல், பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆரைப் பற்றி சந்திரபாபு பேசியதும் அவரது மனதைப் புண்படுத்தியிருக்கிறது.

சந்திரபாபு பேசுகையில், `அவர் (எம்.ஜி.ஆர்) ஒரு மருத்துவமனை கட்டி வருகிறார் என்று கேள்விப்பட்டேன். நடிப்பதற்குப் பதிலாக அவர் அந்த ஹாஸ்பிட்டலின் கம்பவுண்டராகப் போய்விடலாம்’ என்று சொன்னதும் எம்.ஜி.ஆரை மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதாகச் சொல்வார்கள். அதேபோல், இன்னொரு பேட்டியில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்கள் யார் என்ற கேள்விக்கு, நானும் சிவாஜி கணேசனும் என சந்திரபாபு சொன்னதும் எம்.ஜி.ஆருக்குக் கோபத்தை வரவழைத்திருக்கலாம் என்கிறார்கள்.

நடிப்பு, டான்ஸ், பாடல் என பல திறமைகளைத் தனக்குள் பொதிந்து வைத்திருந்த சந்திரபாபு ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்டிருக்கிறார். அப்படி, விஜி என்கிற தயாரிப்பாளர் அவரது படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறார். காமெடி படமொன்றை எடுக்க அவர்கள் திட்டமிட்ட நிலையில், கோவிந்தசாமி என்கிற தயாரிப்பாளரும் இவர்களது கூட்டணியில் இணைந்திருக்கிறார். எடுக்கிறதுதான் எடுக்கிறோம். இண்டஸ்ட்ரியில் முன்னணி ஹீரோவாக இருக்கும் எம்.ஜி.ஆரை வைத்து படமெடுக்கலாம் என்று பேச்சு எழுந்திருக்கிறது. எம்.ஜி.ஆரிடம் நானே கூட்டிப்போகிறேன் என தயாரிப்பாளர் கோவிந்தசாமி சொல்லியிருக்கிறார்.

அதன்படி எம்.ஜி.ஆரிடம் சந்திரபாபு சொன்ன கதைதான் மாடி வீட்டு ஏழை படம். மிகப்பெரிய பணக்காரர் ஒருவர் தனது சொத்துகளையெல்லாம் விட்டுவிட்டு ஏழை வாழ்வை வாழ முன்வருவதுதான் கதை. படத்தின் கதையைக் கேட்ட எம்.ஜி.ஆர், நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், பழைய நிகழ்வுகளை மனதில் வைத்து, நீங்கள் என்னைப் பற்றி பத்திரிகைகளில் தரக்குறைவாகப் பேசியதாகக் கேள்விப்பட்டேன் என்று கேட்டிருக்கிறார். அதைக்கேட்டு பதறிப்போன சந்திரபாபு, இனிமேல் அப்படி நடக்காது என்று சொல்லி சமாளித்திருக்கிறார். மேலும், எம்.ஜி.ஆர் இரண்டு கண்டிஷன்களையும் போட்டிருக்கிறார்.

`இந்தக் கதையை வேறு யாரிடமும் நீங்கள் சொல்லக் கூடாது. அதேபோல், என்னை வைத்து படமெடுக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். குறிப்பாகக் கோபமே படக் கூடாது’ என்பதுதான் அவர் போட்ட கண்டிஷன்கள். அதேபோல், பெரிய தொகையாக ஆறு இலக்கத் தொகையை சம்பளமாகக் கேட்டதோடு, 25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொண்டு பட பூஜைக்கு நாள் குறித்திருக்கிறார் சந்திரபாபு.

இதற்கிடையில், படத்தின் தயாரிப்பாளராக நீங்களும் சேர்ந்துகொள்ளலாமே, பணம் போட வேண்டாம். படத்தை மட்டும் எடுத்துக் கொடுங்கள். லாபத்தில் உங்களுக்குப் பங்கு தருகிறோம் என தயாரிப்பாளர்கள் இருவரும் சொல்ல, அதற்கும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் சந்திரபாபு கையெழுத்திட்டிருக்கிறார். முதல் நாள் ஷூட்டிங்குக்காக செட் போட பணம் கேட்ட நிலையில், இரண்டு தயாரிப்பாளர்களிடமும் பணம் இல்லை. இந்த நிலையில், சாவித்ரியிடம் 25,000 பணம் வாங்கி எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் தொடராக சந்திரபாபு எழுதியிருந்தார்.

செட் போடுவதற்கு கூடுதலாக பணம் செலவான நிலையில், ஆசை ஆசையாய் தான் கட்டிய வீட்டை அடகு வைத்து ஷூட்டிங்குக்குத் தயாராகியிருக்கிறார் சந்திரபாபு. முதல் நாள் பூஜைக்காக காலை 7 மணிக்கு எல்லாரும் ஆஜராகிவிடவே, எம்.ஜி.ஆர் 11 மணிக்குத்தான் வந்திருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடித்த எம்.ஜி.ஆர், கொஞ்சம் கொஞ்சமாக சந்திரபாபுவைத் தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார். எம்.ஜி.ஆர் சரியாக ஒத்துழைக்காத நிலையில், மற்ற நடிகர்களை வைத்து சுமார் 3,000 அடி நீள காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார். இதற்குள் படத்துக்காக 4.5 லட்ச ரூபாய் அளவுக்கு சந்திரபாபு மட்டுமே முதலீடு செய்திருக்கிறார்.

இது இன்றைய மதிப்புக்கு 20, 30 கோடி ரூபாய்க்கு சமம் என்கிறார்கள். அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தும் எம்.ஜி.ஆர் ஷூட்டிங்குக்கு வராத நிலையில், அவரை நேரில் போய் அழைத்து வரலாம் என ராமாவரம் தோட்டத்துக்குப் போயிருக்கிறார் சந்திரபாபு. ஆனால், அங்கு அவருக்கு அவமரியாதையே நடந்திருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல கடனில் மூழ்கியிருக்கிறார் சந்திரபாபு. அந்தப் படமும் கைவிடப்படவே, ஒரு காலத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிய சந்திரபாபு ஒருவேளை சாப்பாட்டுக்கே தத்தளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடனில் இருந்து மீள்வதற்காக 1966-ல் தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற படத்தை சந்திரபாபு எடுத்தார். அந்தப் படம் ஒளிப்பதிவுக்காகப் பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் தோல்விப் படமாகவே போய்விட்டது. 1969-ல் எம்.ஜி.ஆர் தயாரித்த அடிமைப் பெண் படத்தில் காமெடி வேடம் கொடுத்து சந்திரபாபுவுக்கு உதவினார். ஆனாலும், கடைசி வரை சந்திரபாபுவால் கடனில் இருந்து மீளவே முடியவில்லை. தன்னுடைய கடைசி காலத்தை நண்பர் எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டில் கழித்த சந்திரபாபு, மன உளைச்சலால் 1974-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி உயிரிழந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top