நாட்டாமை படத்தில் குஷ்பு நடிச்சதுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கா?... எல்லாம் நேரம்தான் போல!
1994 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “நாட்டாமை”. இதில் சரத்குமாருடன் மீனா, குஷ்பு, மனோரமா, சங்கவி, கவுண்டமணி, செந்தில் ஆகிய பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சரத்குமாரின் கேரியரில் மிகவும் திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார், இத்திரைப்படத்தில் குஷ்பு நடித்தது குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
திடீரென கேட்ட குஷ்பு..
அதாவது “நாட்டாமை” திரைப்படத்திற்கு முதலில் குஷ்பு கதாப்பாத்திரத்தில் நடிகை லட்சுமியை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்தாராம் கே.எஸ்.ரவிக்குமார். அவ்வாறு ஒரு நாள் லட்சுமியை ஒப்பந்தம் செய்ய அவரது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், கே.எஸ்.ரவிக்குமாரை பார்க்க வேண்டும் என கூறினாராம்.
ஆதலால் ரவிக்குமார், பொட்டானிக்கல் கார்டன் பகுதியில் படப்பிடிப்பில் இருந்த ராஜேந்திர பிரசாத்தை பார்த்துவிட்டு அதன் பின் லட்சுமி வீட்டிற்கு செல்லலாம் என முடிவெடுத்து டிரைவரிடம் பொட்டானிக்கல் கார்டனை நோக்கி வண்டியை திருப்ப சொன்னாராம். அப்போது அங்கே படப்பிடிப்பில் குஷ்புவும் இருந்தாராம்.
கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்த குஷ்பு, அவர் அருகே வந்து, “என்ன சார், இந்த பக்கம்?” என கேட்க, அதற்கு ரவிக்குமார், “லட்சுமியை பார்க்க போய்க்கொண்டிருந்தேன். ராஜேந்திர பிரசாத் சார் கூப்பிட்டிருந்தாரு. அதான் போற வழியில் பார்த்துவிட்டு போகலாம் என வந்தேன்” என கூறியிருக்கிறார்.
“லட்சுமியை எதற்கு பார்க்கப் போறீங்க?” என குஷ்பு கேட்க, அதற்கு கே.எஸ்.ரவிக்குமார், “அடுத்து நாட்டாமைன்னு ஒரு படம் பண்றேன். அதுக்கு ஒரு கேரக்டர்ல நடிக்க சொல்லலாமேன்னுதான் போறேன்” என கூறியிருக்கிறார்.
அதற்கு குஷ்பு, “அந்த கேரக்டர் ஏன் நான் பண்ணக்கூடாது” என குஷ்பு கேட்க, ரவிக்குமாரோ, “அது கொஞ்சம் வயதான கதாப்பாத்திரம். முடிக்கு வெள்ளை வைக்க வேண்டியதாக வரும்” என சொல்ல, அதற்கு குஷ்பு, “நான் இதற்கு முன்பு அண்ணாமலையில் வயதான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேனே” என கூறியிருக்கிறார்.
குஷ்புக்காக உருவான ஹிட் பாடல்
அதன் பின் கே.எஸ்.ரவிக்குமார், லட்சுமியின் வீட்டிற்கு போகாமல் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அங்கே அவரிடம் விஷயத்தை கூற, தயாரிப்பாளரும் சரி என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த கதாப்பாத்திரம் மிகவும் சின்ன கதாப்பாத்திரமாக இருந்ததாம். குஷ்பு நடிப்பதால் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத் தன்மையை விரிவாக்கியிருக்கிறார். அவ்வாறுதான் “கொட்டை பாக்கும்” என்ற பாட்டையும் அதில் சேர்த்திருக்கிறார். குஷ்பு இல்லை என்றால் அந்த பாடலும் இருந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms