வெற்றிமாறன் உதவி இயக்குனராக சேர்ந்ததுக்கு பின்னாடி இப்படி ஒரு சுவாரஸ்ய சம்பவம் இருக்கா?
இயக்குனர் வெற்றிமாறனின் உருவாக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருந்த “விடுதலை” திரைப்படம் மக்களின் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. திரும்பும் திசைகளில் எல்லாம் “விடுதலை” திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
சூரி கதாநாயகனாக மிக சிறப்பாக நடித்துள்ளார் எனவும் அவர் இதற்கு முந்தைய திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் என்ற ஞாபகமே வரவில்லை எனவும் திரைப்படத்தை பார்த்தவர்கள் பலர் கருத்து கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில் வெற்றிமாறன் எப்படி உதவி இயக்குனராக சேர்ந்தார் என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்க்கலாம். வெற்றிமாறன் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு தான் ஒரு வக்கீல் ஆக வேண்டும் என்ற ஆசைதான் இருந்ததாம். அவர் ஆங்கிலத் துறையை இளநிலையாக எடுத்துப்படித்ததால் அவருக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது.
வெற்றிமாறன் பல பிரபலங்கள் போல் குரல் மாற்றி பேசும் திறன் பெற்றிருந்தாராம். மேலும் நல்ல கவிதைகளும் கதை எழுதும் வழக்கமும் இருந்ததாம். ஆதலால் அவரது பேராசிரியர் ஒருவர், “உன்னிடம் கலைத்திறன்கள் அதிகமாக இருக்கிறது. நீ ஏன் சினிமாவுக்கு போககூடாது?” என்று கூறி அவருக்கு சினிமாவின் மீதான ஆர்வத்தை தூண்டியிருக்கிறார்.
அந்த பேராசிரியர் வெற்றிமாறனை பாலு மகேந்திராவிடம் அனுப்பியிருக்கிறார். ஆனால் பாலு மகேந்திரா, வெற்றிமாறனை உடனடியாக சேர்த்துக்கொள்ளவில்லை. “நீ தமிழ் நாவல்களை படித்திருக்கிறாயா?” என பாலு மகேந்திரா கேட்க, அதற்கு வெற்றிமாறன், “இல்லை” என்று கூறியிருக்கிறார். உடனே ஒரு தமிழ் நாவலை கொடுத்து, “இதை படித்துவிட்டு கதை சுருக்கத்தை எழுதிவிட்டு வா” என்று அனுப்பிவிட்டாராம்.
வெற்றிமாறன் அவர் கூறிய படி நாவலை படித்துவிட்டு கதைச் சுருக்கத்தை எழுதி கொண்டு வந்தாராம். பாலு மகேந்திரா அதனை படித்துக்கூட பார்க்காமல் தூக்கி போட்டுவிட்டு, இன்னொரு நாவலை கொடுத்து கதைச் சுருக்கத்தை எழுதி கொண்டு வரச்சொல்லியிருக்கிறார். மீண்டும் கதைச் சுருக்கத்தை எழுதிகொண்டு வர, பாலு மகேந்திரா, மீண்டும் இன்னொரு நாவலை கொடுத்து கதைச் சுருக்கம் எழுதி கொண்டு வரச்சொன்னாராம். இது போல் கிட்டத்தட்ட 13 முறை அவ்வாறு செய்தாராம். அதன் பிறகுதான் பாலு மகேந்திரா, வெற்றிமாறனை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டாராம்.