சிவாஜி நடிப்பில் திருப்தி அடையாத இயக்குனர்... படம் நூறு நாள் ஓடும் அடித்துக்கூறிய கருணாநிதி...
பிரபல தெலுங்குப் பத்திரிகையாளரான பிரத்யக ஆத்மா இயக்குனராக ஆசைப்பட்டார். அதற்கு ஒரு கதையை தேடி வந்தார். அப்போது அவர் கண்ணில் பட்டது பெண் மனம் என்ற நாவலின் கதை. பிரபல நாவலாசிரியர் லட்சுமி எழுதிய கதை அவரினை பெரிதும் ஈர்த்தது. உடனே அக்கதையின் உரிமையை வாங்க தயாரிப்பாளர் சுப்பாராவிடம் சொன்னார்.
கதையின் உரிமையை வாங்கிய பின்னர் படப்பிடிப்பைத் துவங்க அனைத்து ஏற்பாடுகள் நிகழ்ந்தது. ஆனால் அதற்கு முன்னர் தன்னுடைய குருவான டி.பிரகாஷ்ராவ், எல்.வி.பிரசாத்திடம் கதையை கூறினார். அவர்களோ இதெல்லாம் கதையே இல்லை. இதை விட நல்ல கதையை தேர்ந்தெடுத்த இயக்கு என அறிவுரையை கூறினர். ஆனால் தயாரிப்பாளர் சுப்பாராவ் மற்றும் இயக்குனர் பிரத்யக ஆத்மா இருவருக்கும் கதை பிடித்து இருந்தது. இதனால் இன்னும் சிலரிடம் கதை கூறி எப்படி எனக் கேள்வி எழுப்பினர். அவர்கள் எல்லாம் கண்டிப்பாக இந்த கதை ஹிட் அடிக்கும் என்றே கூறினர். இதனால் படப்பிடிப்பு விரைவாக துவங்கியது.
“பார்யா பார்த்தலு” என்ற பெயரில் வெளியான அப்படத்தில் ஏ.நாகேஸ்வரராவும், கிருஷ்ண குமாரியும் ஜோடியாக நடித்தனர். இயக்குனரின் எண்ணம்படியே படம் வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் சிறந்த படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றது. இதை பார்த்த சினிமா உலகம் அப்படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகளை எடுத்தனர்.
நிச்சயமாக இந்த கதை வெற்றி பெறாது என்று சொன்ன எல்.வி.பிரசாத் உரிமை வாங்கி தமிழில் இப்படத்தினை இயக்கினார். ‘இருவர் உள்ளம்’ என தமிழில் பெயரிடப்பட்ட இப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக சரோஜதேவி நடித்திருந்தார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டிற்கு தயாராகியது. இருந்தும், எல்.வி.பிரசாத்துக்கு இப்படம் ஓடும் என்ற நம்பிக்கை இல்லை. இதனால் கருணாநிதிக்கு படத்தினை போட்டுக்காட்டினார்.
அதை பார்த்த அவர், கண்டிப்பாக இப்படம் 100 நாள் ஓடும் எனத் தெரிவித்தாராம். அப்படி ஓடினால் உங்களுக்கு பத்தாயிரம் தருகிறேன் என கருணாநிதியிடம் சொல்லி இருக்கிறார் பிரசாத்.கலைஞர் கருணாநிதி கணித்தபடியே ‘இருவர் உள்ளம்’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. படம் நூறு நாளை தொட்ட பிறகு கலைஞர் வீட்டிற்கு சென்ற, எல்.வி.பிரசாத் தான் கூறியபடியே பத்தாயிரத்திற்கான காசோலையை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.