இது மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா...? தமிழ்சினிமாவில் இளையராஜா செய்துள்ள சாதனைகள்
வாயைப்பிளக்க வைக்கும் ஆச்சரியங்களைப் படைத்த போதும் இந்தக்கலைஞரை மதிக்காதவர்கள் இன்றும் உள்ளனர். இருந்தாலும் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது திறமையை மட்டுமே நம்பி பல அடிகள் எடுத்து வைத்து முன்னுக்கு வந்தவர் தான் இளையராஜா.
இவரது தனித்திறமைக்கு இப்போது கிடைத்திருக்கும் பரிசு மத்திய அரசு இவருக்குக் கொடுத்திருக்கும் பதவி நியமன எம்.பி. இது மட்டும் போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா என்னும் விதத்தில் அவரது வரலாற்று சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்போது உங்களுக்காக அந்த இனிய தருணங்கள்...!!!
பாவலர் வரதராஜன் 1958ல் திருச்சியில் ஒரு பிரச்சாரத்திற்குப் போனார். அந்த சமயத்தில் அவரது உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. அவருக்கு 3 சகோதரர்கள். உடல்நிலை சரியில்லாததால் அந்தக் கச்சேரிக்கு பாவலரோட அம்மா அவரது சகோதரர் ஞானதேசிகனைத் துணைக்கு அழைத்துச் சென்றார்.
அன்று ஆர்மோனியப்பெட்டியைத் தூக்கிட்டு பாவலரோடு ஞானதேசிகன் போனார். 1970களில் இருந்து இசையால் தமிழ்சினிமாவைக் கட்டி ஆண்ட அந்த ஞானதேசிகன் தான் நம்ம இசைஞானி இளையராஜா.
ஒரு பக்கம் தமிழ்சினிமாவின் இசை அமைப்பாளர்களான எம்எஸ்வி.யும், கே.வி.மகாதேவனும் கோலூச்சிக் கொண்டிருந்தனர். எம்எஸ்வி. தான் அவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்தார். இன்னொரு பக்கம் இளையராஜா தன்னோட சகோதரர்கள் கங்கை அமரன் மற்றும் ஆர்.டி.பாஸ்கரோடு சேர்ந்து இசை அமைப்பாளராகணும்ங்கற கனவுகளுடன் சென்னைக்குக் கிளம்பி வருகிறார்.
எம்எஸ்வி.யின் இசைப்பாணிக்கு மக்கள் மத்தியில் இருந்த ரசனை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. ஒரே மாதிரியான இசை என்றால் ஒரு காலகட்டத்தில் சலிப்பு தட்டத்தானே செய்யும்?
இளையராஜாவோ வறுமையிலும், கஷ்டத்திலும் சினிமா உலகிற்கு எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார். அவரது தணியாத ஆர்வத்தைக் கண்டு அவரிடம் பணம் வாங்காமல் எல்லா கருவிகளையும் வாசிக்கக் கற்றுக்கொடுத்தார் தனராஜ் மாஸ்டர்.
காலம் கடந்தது. இசை அமைப்பாளர் சலீம் சௌத்ரியிடம் வாத்தியக்கலைஞராக சேர்ந்தார். அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இசையைக் கற்றுக்கொண்டு இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் கம்போசிங்க் அசிஸ்டண்டாக சேர்ந்தார்.
இளையராஜாவின் திறமையைக் கண்டு வியந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவரை அன்னக்கிளி படத்திற்கு இசை அமைக்க வைத்தார். 1976ல் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் அன்னக்கிளி என்ற படத்திற்கு இசை அமைத்து முதன்முதலாக தமிழ்த்திரையுலகில் நுழைந்தார்.
இந்தப்படத்திற்காக பஞ்சு அருணாச்சலம் தன் நண்பர்கள் மத்தியில் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். வறுமையில் உழன்ற அவரது முகத்தைப் பார்த்ததும் சுற்றி இருந்த எல்லோருக்கும் அவரின் மீது ஒரு ஏளனப்பார்வை தான் இருந்தது.
அப்போது பஞ்சு அருணாச்சலம் உடனே ஆசையாய் ஒரு பாட்டு போட்டுக் காட்டுன்னு சொன்னார். உடனே இளையராஜா அங்கிருந்த டேபிளில் தாளம் போட்டு பாட்டும் பாடிக்காட்டினார். ஏளனப்பார்வை பார்த்த எல்லோரும் அவரது திறமையைக் கண்டு வியந்தனர்.
பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜா பாவலர் பிரதர்ஸ்னு அன்னக்கிளி டைட்டிலில் போடுமாறு கேட்டார். அதற்கு அவர் இது பழைய பேராக இருக்கு. உனக்கு புதுப் பெயர் வைக்கலாம்னு இளையராஜாவாக மாற்றினார்.
அன்னக்கிளி பாடல்களைப் பதிவு பண்ண ஆரம்பிக்கும்போதே கரண்ட் கட் ஆனது. ராசியில்லாதவர் என முத்திரை குத்தப்பட்டார். பாடல்கள் வெளியானதும் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது.
அன்னக்கிளிக்குப் பிறகு இளையராஜா மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் வந்து விழுந்தன. டப்பாங்குத்து போடுறாரு, இசையோட மரியாதையைக் குறைக்கிறாரு... ரொம்ப காலம் நிக்கமாட்டாரு, சீக்கிரமே காணாமப் போயிடுவாருன்னு விமர்சனங்கள் வந்தன. அதுக்கு எல்லாம் இளையராஜா அசரவில்லை. தன்னோட இசையாலேயே அவர்களுக்குப் பதிலடி கொடுத்தார்.
அதுமட்டுமா நாயகன் படம் இளையராஜாவோட 400வது படம். இவரு இருந்த இடம் தெரியாமலேயே 400வது படம் வந்துட்டார். இனி அமுங்கிவிடுவார் என்றனர். ஆனால் நாயகன் படப்பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.
33வயதில் தான் தன்னோட இசையைத் தொடங்கினார் இளையராஜா. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே வருடத்தில் 56 படங்களுக்கு இசை அமைத்து சாதனை செய்தவர் இளையராஜா. அதனால் தான் அவர் இசைஞானி ஆனார். அது மட்டுமா இன்னும் அவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரே நாளில் அதிகபட்சமாக 20 பாடல்கள் வரை இசை அமைத்துள்ளார். இளையராஜா ஒரு அழகான பாடல்களை உருவாக்கும் போது அது அழகிலும் அழகாகி விடும். தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே என்ற பாடல் இன்றைய இளைஞர்களையும் தாளம் போட வைக்கும்.
ஆனால் இந்தப்பாடலை அவர் கம்போசிங் பண்ண எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு என்று தெரியுமா? வெறும் அரை மணி நேரம் தான். ஆனால் இந்தப்பாடலோ இன்னும் பல தலைமுறைகளைக் கடந்தும் ஒலிக்கும் அளவில் உள்ளன.
நூறாவது நாள் படத்தில் ரீ ரிக்கார்டிங்கை 12 மணி நேரத்தில் முடித்துக் கொடுத்தார். சிகப்பு ரோஜாக்கள் ரீ ரிக்கார்டிங்கை 5 இசைக்கலைஞர்களை வைத்து முடித்துக் கொடுத்தார். உலகப்புகழ்பெற்ற லண்டன் டிரினிடி இசைக்கல்லூரியில் கிளாசிக்கல் கிட்டார் பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்றார்.
சிம்பொனி இசையை உருவாக்கக் குறைந்தது 6 மாதங்களாகும். ஆனால் ஆசியாவிலேயே 13 நாள்களில் சிம்பொனியை இசைத்துக் காட்டியவர் இளையராஜா. கர்நாடக சங்கீதத்தில் பஞ்சமுகி என்ற புதிய ராகத்தை உருவாக்கியவர் இளையராஜா. அமிர்தவர்ஷினி என்ற மழையை வருவிக்கும் ராகத்தில் தூங்காத விழிகள் இரண்டு என்ற பாடலை உருவாக்கினார்.
உலகின் சிக்கலான இசையான கவுண்டர் பாயிண்ட் இசையில் என் கண்மணி உன் காதலன் என்ற பாடலை உருவாக்கினார். காதலின் தீபம் ஒன்று என்ற பாடலுக்கு மொத்த இசையையும் முதலில் விசிலாக அடித்து அதைப் பதிவு செய்து கொண்டார். அதன்பின்னரே அது இளையராஜாவின் கைவண்ணத்தில் பாடலாக மாறியது.
இந்தியத் திரை இசையில் எலெக்ட்ரிக் பியானோவை அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. இந்தியாவுக்குக் கம்ப்யூட்டர் இசையை புன்னகை மன்னன் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. தளபதி படத்தில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலுக்கு 134 இசைக்கருவிகளைக் கொண்டு இசை அமைத்துள்ளார்.
ஹேராம் படத்திற்கு இன்னொருவர் கம்போஸ் பண்ணியதை அப்படியே நீக்கிவிட்டு புது இசையைக் காட்சி அமைப்புகளுக்கும் வாயசைவிற்கும் ஏற்றவாறு போட்டு எல்லோரையும் மிரள வைத்தார். இது உலகிலேயே எந்த ஒரு இசைக்கலைஞரும் பண்ணாத விஷயம். ஒரு படத்தின் ரீலைப் பார்க்கும் போதே நோட்ஸ் எழுத ஆரம்பிக்கிறவர் இரண்டாவது முறை பார்க்கும்போது முழு நோடசையும் முடிச்சி கம்போசிங்கிற்கு அனுப்பி விடுவார்.
படத்தோட கதையைக் கேட்காமல் முழு பாடல்களுக்கும் இசை அமைத்தார் இளையராஜா. அதுதான் கரகாட்டக்காரன். வேற படத்துக்கு இசை அமைத்து அந்தப்பாடல்கள் வேணாம் என்று சொல்ல அந்தப் பாடல்களுக்கேற்ப எடுக்கப்பட்ட படம் தான் வைதேகி காத்திருந்தாள். படத்தின் பாடல்களைக் கேட்டால் இன்றும் நம்மால் அதை ரசிக்காமல் இருக்க முடியாது.
தேசிய விருது முதல் பத்மவிபூஷன் விருது வரை வாங்கி விருதுகளைக் குவித்துள்ளார் இளையராஜா. 1000 படங்களுக்கு மேல் இளையராஜா இசை அமைத்துள்ளார். அவருடைய ஆயிரமாவது படம் தாரை தப்பட்டை. இந்தப்படத்திலும் தேசிய விருதை அள்ளினார்.
இசையுடன் இயற்கையையும் கலந்து ரசிகர்களுக்கு விருந்தாக அளித்தவர் இளையராஜா. அதனால் தான் அவரது இசைக்கு இன்று வரை அழிவே இல்லை. இது காலத்தையும் கடந்து நிற்பதற்கு காரணம் மண்ணின் மணம் மாறாமல் மக்களின் பாரம்பரியம் மாறாமல் இன்றும் இளமையுடன் உள்ளது.
இவரது இசை இன்றும் பல நோயாளிகளுக்கு மருந்தாக உள்ளது என்றால் மிகையில்லை.