ஈஷா சார்பில் திருநெல்வேலியில் கபடி போட்டிகள் - இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு
ஈஷா சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் திருநெல்வேலி மற்றும் தென்காசியில் செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து கோவையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதி போட்டியில் முதலிடம் பெறும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருநெல்வேலியில் இன்று (ஆக.24) நடைபெற்றது. இதில் ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ என்னும் விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடக்கிறது. ஆண்களுக்கான வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலாக கபடி போட்டிகள் மாநில அளவில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து மாவட்டம், மண்டலம், மாநிலம் என 3 கட்டங்களாக நடத்தப்படும்.
மாவட்ட அளவிலான போட்டிகள் 38 மாவட்டங்களிலும் நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்திற்கான போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் செப்.2 மற்றும் 3-ம் தேதி நடைபெறும். அதே தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட போட்டிகள் ஜார்ஜ் ரோட்டில் உள்ள தருவாய் ஸ்போர்ட்ஸ் காம்பளக்ஸில் நடைபெறும்.
இதேபோல், ஆக.26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் அளந்தங்கரை கபடி கிளப்பிலும், தென்காசியில் எம்.எஸ்.பி வேலாயுத நாடார் லட்சமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியிலும், விருதுநகரில் ராஜபாளையத்தில் உள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.
மாவட்ட அளவில் வெவ்வேறு அணிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு ஒரு அணியாக தேர்வு செய்யப்படுவார்கள். மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மண்டல அளவிலான போட்டிகளில் இருந்து வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.
இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள்.
இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் https://isha.co/gramotsavam-tamil என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இத்திருவிழாவை நடத்தும் ஈஷா அவுட்ரீச் அமைப்பு, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையிடம் இருந்து தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு (National Sports Promotion Organization) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்’ என்ற உயரிய விருதை அப்போதைய மாண்புமிகு பாரத குடியரசு தலைவர், ஈஷா அவுட்ரீச்சிற்கு வழங்கி கெளரவித்துள்ளார்.
மேலும், இத்திருவிழாவின் இறுதிப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ், பி.வி.சிந்து, ஷிகர் தவான், வீரேந்திர சேவாக் போன்ற விளையாட்டு துறை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.