6 மாநிலங்கள், 60,000 வீரர்கள் பங்கேற்கும் ‘ஈஷா கிராமோத்சவம்’ - 55 லட்சம் பரிசு தொகையை அள்ள அற்புத வாய்ப்பு

by சிவா |
isha
X

இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்சவம்’ இந்தாண்டு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கணைகளுக்கு ஒட்டுமொத்தமாக 55 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன.

ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் 15-வது முறையாக நடத்தப்படும் இத்திருவிழா இந்தாண்டு முதல்முறையாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி என மொத்தம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெற உள்ளது. இதில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 60,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் விளையாட்டு வீரர், வீராங்கணைகளாக களம் காண உள்ளனர்.

இது தொடர்பாக ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி நகுஜா அவர்கள் கூறுகையில், “ஈஷா கிராமோத்சவம் என்பது மற்ற அமைப்புகள் நடத்தும் விளையாட்டு போட்டிகளில் இருந்து பெரிதும் வேறுப்பட்ட ஒன்றாகும். இதில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் விளையாடும் விளையாட்டு வீரர்கள், பல்கலைக்கழக வீரர்கள், தொழில்முறை வீரர்கள் என ஏற்கனவே சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அனுமதி இல்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் அந்தந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு அணியை உருவாக்கி இப்போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்.

இதன்மூலம், ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு புதிய அணி உருவாகவும், பழைய அணிகள் மீண்டும் புத்துயிர் பெறவும் வாய்ப்பு உள்ளது. அணியை உருவாக்கி, குழுவாக சேர்ந்து பயிற்சி எடுக்கும் செயல்முறையின் மூலம் இளைஞர்களின் தலைமைப் பண்பும், ஒற்றுமை உணர்வும் அதிகரிக்கும்.

இதுதவிர, 14-வயதை கடந்த யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்க முடியும் என்பதால், பல ஆண்டுகளாக விளையாட வாய்ப்பின்றி இருந்த குடும்ப பெண்களும், முதியவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இப்போட்டிகளில் இருந்து பெறுவார்கள். இதன்மூலம், ‘வெற்றி’ என்ற ஒற்றை பலனை தாண்டி, கிராமத்தின் சமூக ஒற்றுமை, ஆரோக்கிய மேம்பாடு, பெண்களின் சுயசார்பு தன்மை என பல அம்சங்களை பயன்களாக பெற முடியும்.

இளைஞர்களை போதை பழக்கங்களில் இருந்து வெளி கொண்டு வந்தது, கிராமப்புற பெண்களை விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க செய்தது, சாதிய வேறுபாடுகளை கடந்த ஒற்றுமை மனநிலையை உருவாக்கியது என பல மாற்றங்களை இத்திருவிழா சாதித்து காட்டியுள்ளது.

விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் உருவாக்குவது தான் ஈஷா கிராமோத்சவத்தின் அடிப்படை நோக்கம். சத்குரு அவர்களால் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திருவிழா வெறும் 4 தாலுக்காவில் ஆரம்பித்து படிப்படியாக இப்போது தென்னிந்திய அளவில் நடத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவரை 8,412 அணிகளும், சுமார் 1 லட்சம் வீரர்களும் கிராமோத்சவ போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்” என்றார்.

isha

மேலும், இந்தாண்டு போட்டிகள் குறித்து பேசுகையில், “ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபாடி போட்டி என மொத்தம் 4 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வாலிபால் (ஆண்கள்) - ரூ.5 லட்சம், த்ரோபால் (பெண்கள்) - ரூ. 2 லட்சம், கபாடி (ஆண்கள்) - ரூ.5 லட்சம், கபாடி (பெண்கள்) - ரூ.2 லட்சம் என மிகப்பெரிய பரிசு தொகைகள் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கப்படும். இதுதவிர, கிளெஸ்டர், டிவிஸ்னல் அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கும் பரிசு தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அணியில் இடம்பெறாத மக்கள் பங்கேற்று மகிழ்வதற்காக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

இந்தாண்டிற்கான போட்டிகள் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும். இறுதிப் போட்டிகள் கோவையில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி முன்பு மிகப் பிரமாண்டமாக நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் https://isha.co/gramotsavam-tamil என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என்றார்.

இத்திருவிழாவை நடத்தும் ஈஷா அவுட்ரீச் அமைப்பு, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையிடம் இருந்து தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு (National Sports Promotion Organization) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்’ என்ற உயரிய விருதை அப்போதைய மாண்புமிகு பாரத குடியரசு தலைவர், ஈஷா அவுட்ரீச்சிற்கு வழங்கி கெளரவித்துள்ளார். மேலும், இத்திருவிழாவின் இறுதிப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ், பி.வி.சிந்து, ஷிகர் தவான், வீரேந்திர சேவாக் போன்ற விளையாட்டு துறை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story