மாறுவேடத்தில் போய் என்.எஸ்.கேவை சோதித்த ஐடி ரெய்டு அதிகாரி!.. இதுதான் நடந்தது!...
எல்லோருக்கும் உதவியவர், பணத்தை வாரி வாரி எல்லோருக்கும் இறைத்தவர், உதவி என யாரேனும் கேட்டால் மறுப்பு சொல்லாமல் தன்னிடம் இருப்பதை கொடுத்த நடிகர், வள்ளல் என சொன்னால் எல்லோரும் எம்.ஜி.ஆரை சொல்வார்கள். ஆனால், அவருக்கு குரு ஒருவர் இருக்கிறார். உண்மையிலேயே எம்.ஜி.ஆரின் குருவாக இருந்த என்.எஸ்.கிருஷ்ணன்தான் அந்த வள்ளல். ரசிகர்களால் கலைவாணர் என அழைக்கப்பட்டவர். எம்.ஜி.ஆர் அவருக்கு தெரிந்து யாராவது கஷ்டப்பட்டால், அதாவது யாருக்கு உதவ வேண்டுமோ அவர்களுக்கு உதவுவார்.
ஆனால், என்.எஸ்.கிருஷ்ணன் அவரிடம் உதவி என யார் வந்து கேட்டாலும் அப்படியே அள்ளி கொடுப்பார். நாடக நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், சினிமா நடிகர் என பல வகைகளிலும் சம்பாதித்த பணத்தில் பெரும்தொகையை எல்லோருக்கும் தான, தர்மாகவே கொடுத்தவர் அவர். அவரிடமிருந்துதான் மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் எம்.ஜி.ஆருக்கே வந்தது.
ஒருமுறை அவரின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது என்.எஸ்.கே வீட்டில் இல்லை. பனியாட்கள் மட்டுமே இருந்தனர். என்.எஸ்.கே. என்னென்ன செலவு செய்கிறார்கள் என்கிற கணக்கு ஒரு நோட்டில் எழுதப்பட்டிருந்தது. அதில் பெரும்பாலும் ‘தானம்’.. ‘தானம்’ என்றே எழுதியிருந்தது. அதைப்பார்த்த ஒரு அதிகாரி ‘என்ன இது.. இது எல்லாமே தானமா?. இதை எப்படி நான் நம்புவது?’ என கேட்க, வீட்டின் பனியாட்களில் ஒருவர் ‘வேண்டுமானால் நீங்களே சோதித்து பாருங்கள்’ என்றாராம்.
சில நாட்கள் கழித்து அந்த அதிகாரி ஏழைபோல் வேடமணிந்து என்.எஸ்.கேவை சந்தித்து ‘என் மகள் திருமணத்தை நடத்தி வைக்க எனக்கு ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அது இல்லாமல் திருமணம் நின்று விடும் சூழ்நிலை இருக்கிறது. எனக்கு உதவுங்கள்’ என கேட்க, பதறிப்போன என்.எஸ்.கே ‘ஐயோ பாவம்!..ஆயிரம் ரூபாய்க்காக திருமணம் நிற்க கூடாது’ என உடனே அந்த பணத்தை எடுத்து கொடுத்துள்ளார்
அதைக்கண்டு அந்த அதிகாரியே நெகிழ்ந்து போய் அழுதுவிட்டாராம். அதன்பின் தான் யார் என அவரிடம் சொல்லிவிட்டு, அவரின் கொடுக்கும் குணத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து சென்றாராம்.