ரஜினி தாதா சாகேப் பால்கே விருது வாங்கி இருக்கும் இந்த நேரத்தில் வழக்கம் போல் நியாயப்படி இந்த விருது கமலுக்குதானே கொடுக்க வேண்டும். எதற்கு ரஜினிக்கு? இந்த கேள்வி கமல் ரசிகர்கள் மற்றும் சிலரையும் தூங்க விடாமல் எரிச்சலடைய செய்திருக்கிறது.
ஆமாம். எதற்கு ரஜினிக்கு?
ரஜினியும் கமலும் ஒரே தமிழ்த்திரை என்கிற தளத்தில் பயணித்தாலும் கமல் குழந்தையாக நடித்து பெயரும் புகழும் பெற்றிருந்தார். அவர் திரையுலகில் எப்படியாவது நடன அசிஸ்ட்டண்ட்டாக, சிறிய நடன பையனாக ஜெயலலிதாவோடு ஆடுபவராக, மலையாளத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த மதுரை மண்மகன்.
ஆனால் ரஜினி தமிழே தெரியாமல், பேசமுடியாமல் ஒரு மாநிலம் விட்டு ஒரு மாநிலம் வந்து, படிக்கக்கூட பணமில்லாமல் தன் வாழ்க்கையை துவக்கியவர். பாலச்சந்தர் மட்டும் வாய்ப்பு தந்திருக்காவிட்டால் ரஜினி மேலே வந்திருப்பது தமிழ்நாட்டில் கஷ்டம் தான். கமலுக்கு அப்படி இல்லை. தமிழ்நாட்டில் பாலச்சந்தர், கேரளத்தில் கே.எஸ்.சேதுமாதவன், ஆந்திரத்தில் கே.விஸ்வநாத் என சிலர் அவரை தூக்கி நடந்திருக்கின்றனர் என்பதில் பொய்யில்லை.
ரஜினி நடிக்க தொடங்கிய போதும், கௌரவ வேடத்தில் பதினாறு வயதினிலேயில் நடித்த போதும் கூட தன் முத்திரையை அவர் பதிக்க முனைந்தார். கமல் நிறைய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்து எண்ணிக்கையை கூட்டினார். கமலின் முதல் 50 படங்களில் தனி ஹீரோவான தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ரஜினியின் முதல் 50ல் பெருவாரியானவை வெற்றிப்படங்கள்தான்.
கமல் தான் பேசப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து உழைப்பார். ஆனால் ரஜினி அப்படி நினைத்து எதுவும் செய்வதில்லை. ஆனால் பேசப்படுபவராக மாறிப்போவார். சிவக்குமார் கூட ஒரு பேட்டியில் ‘உயிரைக்கொடுத்து கமல் படம் முழுக்க நடித்தார். ஆனால் மூன்றே சீனில் வில்லனாக வந்து ரஜினி பெயர் வாங்கிக்கொண்டார். அது அவர் தலையெழுத்து’ என்று சொன்னதில் எத்தனை உண்மை.
நாயகன் என்கிற படம் வந்த போது ரஜினி மனிதன் என்கிற படத்தில் நடித்தார். வெற்றியில் இரண்டும் சமமென்றாலும் நாயகன் முன்பு மனிதன் படமே கிடையாது. ஆனாலும் வெற்றி சரிசமமாகவே இருந்தது.
கமலை ஹிந்தியிலும் கொண்டு போய் கே.பி நிறுத்தியது போல் ரஜினியை நிறுத்த யாரும் அன்று இருக்கவில்லை. சட்டம் ஒரு இருட்டறை படத்தை அமிதாப் நடிக்க போட்டுக்காட்டிய போது அவர் தேர்ந்தெடுத்தது (சங்கர்) கணேஷ் பாத்திரத்தை தான். அதை விரிவு படுத்துங்கள் என எஸ்.ஏ.சியிடம் அமிதாப் சொன்ன போது அமிதாப்போடு நடிக்க நாயகர் அங்கு தயாரில்லாத போது தென்னிந்தியாவிலிருந்து ரஜினி கொண்டு வரப்பட்டதாக எஸ்.ஏ.சி ஜெயா டிவி ஷோவில் சொன்னது யூடியூபில் இருக்கிறது.
அப்படி ரஜினியை தேடி வந்ததே ஹிந்தி பட வாய்ப்பு. பின்னாளில் ஷாருக்கான் ‘தலைவா’ என பாட்டு பாடி நடனம் ஆடும் அளவுக்கு வளர்ச்சி. ஷங்கரின் எந்திரன் முதலில் போனது கமலிடமே. ஆனால் அதில் ரஜினிதான் பின்னாளில் நடித்தார். கமலின் சில பாத்திரங்களில் ரஜினியும் நடிக்க முடியும் என நிரூபித்த தருணம் அது.
அடுத்த தலைமுறையில் கூட ஜனரஞ்சக படம் செய்யும் எல்லா நடிகர்களிடமும் ரஜினி தெரிவார். அதுதான் ரஜினியின் நடிப்புக்கு வெற்றி. அவரை பிடிக்காதவர்கள் கூட அவர்களுக்கு தெரியாமலேயே ரஜினியை ரசித்திருப்பார்கள்.. ரசிப்பார்கள்.. அந்த மேஜிக் ரஜினிக்கு மட்டுமே தெரியும்…அது அவருக்கு மட்டுமே வரும்…
வீட்டில் அறிவாளியாக ஒரு பிள்ளை படித்துக்கொண்டே இருந்தாலும் நம்மை உற்சாகமாக வைக்க ஒரு அழகு பிள்ளை வேண்டும். அதுதான் ரஜினி.
கமல் ரஜினியை போட்டியாக நினைத்தே வேலை செய்திருக்கிறார். ரஜினி கமலை தன் போட்டியாளராக நினைத்ததில்லை. அதை விட உயர்ந்த அந்தஸ்திலேயே வைத்திருக்கிறார்.
கமல் கமல்தான். ரஜினி ரஜினிதான். ஆனால் சினிமா முகமின்றி, ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு குடிபெயர்ந்து, அம்மாநிலமக்களை மட்டும் வைத்துக்கொண்டு, அவர்களின் ரசிப்புத்தன்மையை மட்டும் கணக்கிட்டு இந்திய அளவிலும், உலக அளவிலும் வெற்றி பெற ஒரு தனி உழைப்பு வேண்டும். அந்த உழைப்பில் பூத்த பூ தான் தாதா சாகேப் விருது. இதுபோன்ற விருதுகளை கொடுப்பதற்கு பின்னால் அரசியலும் இருக்கலாம். ஆனாலும், ரஜினி அதற்கு பொருத்தமானவர்தான்..
தாதா சாகேப் கமலுக்கு முதலில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ரஜினிக்கு கொடுத்ததில் எந்த நியாயமின்மையும் இல்லை என்பதே உண்மை.
ரஜினி அந்த விருதுக்கு நியாயமானவர்தான்.
முகநூலில் இருந்து செல்வன் அன்பு..
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…