ஜெயலலிதா-சோபன் பாபு பிரிவிற்கு காரணமாக அமைந்த சம்பவம்! சைலண்ட் கில்லராக இருந்தது யார்?
திரைத் துறையில் பல பேருக்கு காதல் அனுபவங்கள் பல நடந்திருக்கின்றன. அதேபோல் ஜெயலலிதா வாழ்க்கையிலும் அந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது பெரும்பாலும் தெரிந்த விஷயம் என்றாலும் சில தெரியாத விஷயங்களை நமக்காக பகிர்ந்து இருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளரான டிவி சோமு. ஜெயலலிதாவை பிரபல நடிகர் சோபன் பாபுவுடன் சேர்த்து பல கிசுகிசுக்கள் அந்தக் கால பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தன.
ஜெயலலிதா மீது இருந்த ஈர்ப்பு
இதன் ஆரம்ப விதை எங்கிருந்து உருவானது என்பதை சோமு விவரித்து கூறியிருக்கிறார். அதாவது ஜெயலலிதா நடிக்க வந்து ஐந்து வருடங்கள் கழித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறி இருக்கிறார். அந்த நேரத்தில் சோபன் பாபு சிறு சிறு கதாபாத்திரங்களில் தான் நடித்துக் கொண்டு இருந்தாராம். ஜெயலலிதாவின் திரைப்படங்களை பார்த்து அப்பவே சோபன் பாபுவிற்கு ஜெயலலிதா மீது ஒரு ஈர்ப்பு வந்ததாம்.
தெலுங்கில் வீர அபிமன்யு என்ற திரைப்படத்திற்காக சோபன் பாபு முதன் முதலில் ஹீரோவாக ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெயலலிதாவை அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்துவிட்டு அதை ஷோபன் பாபுவிடமும் தெரிவித்துவிட்டு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தொகையும் கொடுத்துவிட்டு போய்விட்டாராம். ஆனால் நாளாக நாளாக அந்தப் படத்திற்காக சோபன் பாபுவை அழைக்கவில்லையாம்.
இவர் நேராக அந்த தயாரிப்பாளர் இடம் சென்று நடந்ததை விசாரித்திருக்கிறார். அப்போது ஜெயலலிதாவின் அம்மா சந்தியா சோபன்பாபு உடன் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம். இதைக் கேட்டதும் சோபன் பாபுவிற்கு ஒரே ஆத்திரமாக வந்ததாம். இதை சோபன் பாபு அவருடைய கட்டுரையிலேயே எழுதி இருக்கிறாராம். அதன் பிறகு இருவரும் தனித்தனியாகவே படங்களில் நடிக்க இருவரின் படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம்.
ஜெயலலிதா தாய் மீது இருந்த கொலைவெறி
சோபன் பாபுவின் படப்பிடிப்பு பக்கத்தில் தான் ஜெயலலிதாவின் படப்பிடிப்பும் நடந்ததாம். அவரைப் போய் பார்த்துவிட்டு வரலாம் என சோபன் பாபு ஜெயலலிதா இருந்த படப்பிடிப்பிற்கு சென்றாராம். ஆனால் அந்த சமயத்தில் ஜெயலலிதா மேக்கப் போடுவதற்காக சென்றுவிட அவருடைய அம்மா சந்தியா தான் அங்கு அமர்ந்திருந்தாராம். சந்தியாவை பார்த்ததும் சோபன்பாபுவிற்கு கழுத்தை நெரித்து கொன்று விடலாம் போல இருந்ததாம் .இதையும் வெளிப்படையாக சோபன் பாபு அவருடைய கட்டுரையில் எழுதி இருக்கிறாராம்.
அதன் பிறகு சந்தியா இறந்துவிட 70 க்கு பிறகு ஜெயலலிதா அவருடைய தனி ஆர்வத்தில் படங்களில் நடிக்க தொடங்கினார் .அந்த சமயத்தில் தான் சோபன்பாபு உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் அறிமுகமானார்களாம். ஆனால் சோபன் பாபுவை பார்த்த உடனேயே ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம் ஏனெனில் இயல்பாகவே சோபன்பாபு நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராம். தன் அம்மா இறந்த துக்கத்தில் இருந்த ஜெயலலிதாவிற்கு சோபன் பாபுவின் பேச்சும் அக்கறையும் ஆறுதலும் தேவைப்பட்டிருக்கிறது.
ஒத்துக் கொண்ட ஜெயலலிதா
இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய பல கிசுகிசுக்கள் அன்றைய நாளிதழிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்து கொண்டு இருந்தன. அப்போது மும்பை வார பத்திரிக்கை ஒன்று இவர்களைப் பற்றி ஒரு கிசுகிசுவை எழுதியிருந்தார்களாம். அதற்கு ஜெயலலிதா தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினாராம் .அதில் "ஆமாம் நாங்கள் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம்" என்று வெளிப்படையாகவே எழுதி இருந்தாராம்.
இதன் எதிரொளியாக தமிழ்நாட்டிலும் இதைப் பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருக்க ஒரு பத்திரிக்கை இவரை பேட்டி காண வந்திருக்கிறது. அப்போது "நீங்கள் ஏன் சோபன் பாபுவை திருமணம் செய்ய கூடாது?" என கேட்டார்களாம். அதற்கு ஜெயலலிதா "சோபன் பாபு ஏற்கனவே திருமணம் ஆனவர். எங்களுடைய திருமணம் அவருடைய குடும்பத்தை மிகவும் பாதிக்கும். அதனால் தான் நாங்கள் இருவரும் ஒன்றாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறோம்" என அந்த பேட்டியில் கூறி இருந்தாராம்.
பிரியக் காரணம்
இப்படியே போய்க் கொண்டிருக்க 80க்கு பிறகு இவர்கள் பிரிந்து விடுகின்றனர். அதற்கு முறையான காரணம் என்ன என்று தெரியவில்லை என்றாலும் ஒரு சம்பவம் என்ன நடந்திருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்று அந்த பத்திரிக்கையாளர் டிவி சோமு கூறினார். அதாவது ராமன் பரசுராமன் என்ற ஒரு படம் சிவகுமார் நடிப்பில் தமிழில் தயாராகிக் கொண்டிருந்தது.அதே நேரத்தில் தெலுங்கிலும் அந்தப் படம் சோபன்பாபுவின் நடிப்பில் தயாராகிக் கொண்டு இருந்தது.
தெலுங்கில் அந்தப் படத்தின் ஒரு சண்டைக் காட்சிக்காக ஜப்பானில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார்களாம். அந்த காட்சி நன்றாக வரவே அதை ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகனை வைத்து எடிட் பண்ண சொன்னார்களாம். அவரும் அந்த காட்சிகளை அழகாக எடிட் செய்திருந்தாராம். இதை சிவக்குமார் பார்த்துவிட்டு இந்த காட்சிகளை எம்ஜிஆர் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார் என்றும் அவரை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு வரவழைத்து அந்த காட்சியை போட்டு காட்டியதாகவும் சோமு கூறினார்.
அந்த சைலண்ட் கில்லர்
இதற்கிடையில் அந்த காட்சியை பார்ப்பதற்கு எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவிற்குள் நுழையும் போது உள்ளே இருந்து சோபன் பாபு வெளியே வர உடனே எம்ஜிஆரின் காலில் விழுந்து "இனிமேல் உங்கள் வாழ்க்கையில் நான் குறுக்கே வரமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்று அனைவர் முன்னாடியும் சொல்லிவிட்டு சென்றாராம். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் ஜெயலலிதாவும் சோபன் பாபுவும் பிரிந்து விட்டார்களாம்.
இதைப் பற்றி டிவி சோமு கூறியபோது சில சந்தேகங்களை முன் வைத்தார். அதாவது திடீரென்று ஒருவர் எம்ஜிஆர் காலில் விழுந்து வாழ்க்கையில் குறுக்கே வரமாட்டேன் என்று சொல்லி காலில் விழுகிறார் என்றால் அப்போ இதற்கு முன் ஏதோ ஒன்னு நடந்திருக்கிறது என்றுதான் நாம் நினைக்க வேண்டும். எம்ஜிஆர் தரப்பில் இருந்து ஏதாவது ஒரு அழுத்தம் சோபன்பாபுவிற்கு சென்றிருக்க வேண்டும் என்று சோமு கூறினார்.
அதுமட்டுமில்லாமல் ஒரு பெரிய நடிகர் அனைவர் முன்னாடியும் எம்ஜிஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை .அதை அவர் ரகசியமாகவே செய்திருக்கலாம். ஆனால் ஜெயலலிதா சோபன் பாபுவின் விஷயம் உலகம் அறிந்து விட்டது. அதனால் இவர் கேட்கும் மன்னிப்பும் உலகம் அறிய வேண்டும் என எம்ஜிஆர் நினைத்திருக்கலாம். அதன் காரணமாகவே எம்ஜிஆரின் ஏற்பாட்டிலேயே இந்த சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்றும் சோமு கூறினார்.