வீழ்ந்து எழுந்த வில்லாதி வில்லன்.. ஜெகபதி பாபு யார் தெரியுமா?...
அண்ணாத்த படத்தின் ஜெகபதி பாபுவின் அறிமுக காட்சி.. ஒரு தட்டில் மாமிசத்தை போட்டு வழிச்சுகோபமாக சாப்பிடுவது போல் காட்டுகிறார்கள். கொடூரமாக காட்டுகிறார்களாம். இதேமாதிரி எத்தனை படத்தில் காட்டுவார்களோ? ரங்கஸ்தலம், புலி முருகன் படங்களில் இதே அச்சு அசலான ரோல்..
ஜெகபதி பாபு இப்படிப்பட்ட மனுஷனா?
ஜேபி அல்லது ஜக்குபாய் ஒரு காலத்தில் பெரிய ஹீரோ. இவர் அப்பா வி.பி.ராஜேந்திர பிரசாத் பெரிய இயக்குனர். ராஜேந்திரபிரசாத் பல மொழிகளில் படமெடுத்தவர். இவரது படம் தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. தமிழில் எங்கள் தங்க ராஜா, உத்தமன், பட்டாக்கத்தி பைரவன் படங்களை இயக்கியவர். உத்தமன் படப்பிடிப்பில் இவரிடம் உதவி இயக்குனராய் வேலை பார்த்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். சந்திரசேகர்-ஷோபா காதல் கல்யாணத்தை சென்னை தாஸப்ரகாஷ் ஹோட்டலில் சிவாஜியின் மனைவி கமலா அம்மையார் தலைமையில் நடத்தி வைத்தவர் ராஜேந்திர பிரசாத் தான்.
ராஜேந்திரபிரசாத் தன் மகன் ஜெகபதி பாபுவை நாயகனாக்க ஒரு படம் தாயாரித்தார். 'சிம்ஹ சொப்னம்' என்கிற அந்தப்படம் சுமாராகத்தான் போனது. 89ல் அறிமுகமான ஜெகபதி பாபுவுக்கு முதல் வெற்றி 92ல் கிடைத்தது. அதுவும் யாரால். நமது இந்தியன் படத்தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தால். விஜயசாந்தியின் மேக்கப்மேனான ஏ.எம்.ரத்னத்துக்காக 'கர்த்தவ்யம்'(வைஜயந்தி ஐபிஎஸ்) படத்தில் நடித்துக்கொடுக்க அதன் மூலம் தயாரிப்பாளரான ரத்னம் அடுத்த தயாரிப்பை தானே இயக்கினார்.
சித்திக்-லால் எழுதி இயக்கி மலையாளத்தில் ஹிட்டடித்த 'காட்ஃபாதர்' கதையை வாங்கி முகேஷ் ரோலில் ஜெகபதிபாபுவை நடிக்க வைத்தார் ரத்னம். படம் செம ஹிட். மேலும் வெற்றிகளை குவித்த ஜெகபதி பாபுவுக்கு அடுத்த ஹிட் கொடுக்க இருபெரும் இயக்குனர்கள் இணைந்தனர். ராம் கோபால் வர்மா-மணிரத்னம் இருவரின் இணைந்த எழுத்தில் அரசியல் ஆக்ஷன் படமான 'காயம்' பெருவெற்றி பெற்றது.
பின் ரீமேக் படங்களின் நாயகனானார் ஜெகபதிபாபு. சேரன் பாண்டியன் படத்தை பாலராம கிருஷ்ணலு, ஈ புழயும் கடன்னு என்கிற மலையாள ஹிட் ' பெல்லி பீடலு, ஹிந்தி பர்தேஸ் 'பெல்லி காணுக' என ரீமேக் படங்களின் தொடக்கம்.
கிருஷ்ண வம்சி 'அந்தப்புரம்' என்கிற படத்தை தொடங்கிய போது அதில் நாயகி சௌந்தர்யா தான் மெயின். நாயகியை ஒட்டிய மூன்று ஆண் கதாபாத்திரங்கள். காதலித்து மணந்த கணவன், ஊர் பெரிய மனிதரான மாமனார், தப்பித்து வரும் போது உதவும் நாடோடி. இதில் கணவனாக சாய்குமார், மாமனாராக பிரகாஷ் ராஜ், உதவும் நல்லவனாக ஜெகபதி பாபு நடித்தார். படம் ஜெகபதி பாபுவின் ஆக்ஷனில் அதிரடி ஹிட். இதை தமிழில் ஜெகபதி பாபுவின் ரோலுக்கு பார்த்திபனை நடிக்க வைத்து ரீஷூட் செய்து வெளியிட்டார்கள். ஆனால் தமிழ் 'அந்தப்புரம்' கவனிக்கப்படவேயில்லை.
இந்த நேரத்தில் ரஜினியோடு நடிக்கும் வாய்ப்பை பெற்றார் பாபு. குசேலன் படத்தை தமிழில் கவிதாலயா தயாரித்த போது தெலுங்கில் 'கதாநாயகுடு' என்கிற பெயரில் தயாரிக்க வந்தது வைஜயந்தி மூவீஸ் நிறுவனம். தமிழில் பசுபதி நிற்கும் இடத்தில் ஜெகபதி பாபுவை நிற்க வைத்து படத்தை வெளியிட்டது. தமிழில் பசுபதி-ரஜினி காம்போ நிராகரிக்கப்பட்டாலும் தெலுங்கில் ஜெகபதி-ரஜினி காம்போ வெற்றியை பெற்றது.
இப்படி ரஜினியோடு சரிநிகர் சமமாக இருந்த பாபு இன்று ரஜினிக்கு வில்லனாக நடிக்க நேர்ந்தது காலம் செய்த அவலம் மட்டுமல்ல. ஜெகபதி பாபுவின் அலட்சியப்போக்கும் தான். பட வெற்றி குறைந்ததும் வாய்ப்புகளும் குறைய ஜெகபதி பாபு தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபட சொத்துக்கள் ஒவ்வொன்றாக கரைய தொடங்கின. படவாய்ப்பும் இல்லை.
முடிவாக டிவி சீரியல் வரை நடிக்கத்தொடங்கிய ஜெகபதி பாபுவுக்கு வில்லன் ரோல் தந்து ஹாட் வில்லனாக்கி வாழ்வை மாற்றியது பாலகிருஷ்ணாவின் 'லெஜண்ட்' பட இயக்குனர் சீனு. லெஜண்ட் வெற்றியால் ஜெகபதி பாபு இன்று அனைத்து மொழி நடிகராகி விட்டார்.
'தென்காசிப்பட்டணம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நெப்போலியன் ரோலில் நடித்தார் ஜெகபதி. ஜெகபதிக்கு நெருங்கிய நண்பர் நடிகர் அர்ஜுன். அர்ஜுன் இயக்கிய 'மதராஸி' படத்தில் ஜெகபதியை 2006லேயே அர்ஜுன் அறிமுகப்படுத்தி இருந்தார். ஆறு வருடங்களுக்கு பின் 2012ல் 'தாண்டவம்' படத்தில் ரீ என்ட்ரி ஆனார். தமிழில் இன்று அறியப்படும் வில்லன் ஜெகபதிபாபு.
காலம் அவருக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. தன் தந்தையிடம் அசிஸ்ட்டண்ட்டாக இருந்து தன் தந்தையால் திருமணம் செய்து வைத்த இயக்குனருக்கு மகன்(நடிகர் விஜய்) வளர்ந்து சினிமாவில் நாயகனாகி, வில்லனாக தானும் நடித்து அடி வாங்கும் நடிப்பெல்லாம் விதியின் சதுரங்க விளையாட்டு தானே. அதனாலேயே தன் மகள் ஒரு அமெரிக்கனை காதலிக்கிறாள் என்றதும் மனப்பூர்வமாக திருமணம் செய்து வைத்தார் ஜெகபதி பாபு.
காலம் அவரை லைம்லைட்டில் வைத்திருக்கிறது. அவரும் பல உதவிகளை செய்து வாழ்கிறார். புலிமுருகன் படத்தில் 'டாடி கிரிஜா' என்கிற பாத்திரத்தில் பெரிய பணக்காரராக இருப்பார். பின் எல்லாம் இழந்து மோகன்லாலை பழிவாங்க தேடி வருவார். அதே தான் ஜெகபதியின் நிஜவாழ்வும்.
வாழ்வு என்கிற ஹீரோ எவ்வளவு அடித்தாலும் எழும் வில்லாதி வில்லன் அவர்.....
முகநூலில் இருந்து செல்வன் அன்பு...