ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெறாத ஜெய்பீம்... சோகத்தில் ரசிகர்கள்...!
கடந்தாண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த படம் தான் ஜெய்பீம். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்தது.
பழங்குடியின மக்களின் போராட்டங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஜெய்பீம் படம் எந்த அளவிற்கு பாராட்டை பெற்றதோ அதைவிட அதிகமாகவே விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக படம் பல சாதனைகளை புரிந்தது.
அந்த வகையில் திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ஷஷாங் ரிடெம்ப்ஷன் படத்தை முந்தி ஜெய்பீம் படம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது. அதுமட்டும் இன்றி ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தது.
தற்போது 94வது ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் அனுப்பப்பட்ட 276 படங்களில் ஜெய்பீம் படம் தேர்வானதோடு, ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கரின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்த முதல் தமிழ் படம் ஜெய்பீம் என்பது குறிபிடத்தக்கது.
இப்படி பல சாதனைகளை புரிந்த ஜெய்பீம் படம் நிச்சயம் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம் பிடிக்கும் என ரசிகர்கள் உட்பட பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று வெளியான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஜெய் பீம் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் சிலர் ஜெய்பீம் படம் இந்த அளவிற்கு சென்றதே பெரிய வெற்றி தான் என கூறி ஆறுதல் அளித்து வருகிறார்கள்.