சேரில் இருந்து கீழே விழுந்த ஜெய்சங்கர்... “இது எதிராளியின் சதி”… எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு!!
எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜெய்சங்கர். சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது காதல் கொண்டிருந்த ஜெய்சங்கர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு நாடகத்துறையில் கால் எடுத்து வைத்தார். அதன் பின் “இரவும் பகலும்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு
ஜெய்சங்கர் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது அவரது ஜேம்ஸ் பாண்டு பாணியிலான திரைப்படங்கள்தான். அமெரிக்காவில் மிகவும் பிரபலமான Cow Boy பாணியிலான திரைப்படங்களை போலவே பல திரைப்படங்களில் நடித்தார் ஜெய்சங்கர். “கங்கா”, “ஜக்கம்மா” போன்ற திரைப்படங்கள் இதற்கு உதாரணமாக கூறலாம். தமிழ் சினிமாவில் இது போன்ற முயற்சிகளை மிகவும் துணிகரமாக செய்து காட்டியவர் ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையில் விளையாடிய கண்கள்
ஜெய்சங்கர் தொடக்கத்தில் பல திரைப்படங்களில் வாய்ப்பு தேடிச் சென்றபோது அவருக்கு குட்டி கண்கள் என்பதால் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த குட்டி கண்களின் காரணமாகவே வாய்ப்பு தேடி வந்தது. அப்படி அவருக்கு வந்த வாய்ப்புதான் “இரவும் பகலும்”.
அத்திரைப்படத்தின் இயக்குனர் ஜோசஃப் தெலியத், ஜெய்சங்கரின் குட்டி கண்களை பார்த்து, இந்த படத்திற்கு இப்படி ஒரு நபர்தான் சரியாக இருப்பார் என அவரை நடிக்க வைத்தாராம். இவ்வாறு அவரது குட்டி கண்களின் காரணமாக பறிபோன வாய்ப்பு, மீண்டும் அவரது குட்டி கண்கள் காரணமாகவே தேடி வந்திருக்கிறது.
நாடகத்துறையில் ஜெய்சங்கர்
ஜெய்சங்கரும் சோ.ராமசாமியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஆதலால் சோ.ராமசாமியின் நாடக கம்பெனியில் பல நாடகங்களில் ஜெய்சங்கர் நடித்துள்ளார். ஜெய்சங்கர் நடித்த பல நாடகங்களை எம்.ஜி.ஆர் பார்த்து அவரின் நடிப்புத் திறமையை பாராட்டியுள்ளார். அப்படி ஒரு நாடகத்தில் ஜெய்சங்கருக்கு நேர்ந்த அவல நிலையை குறித்தும், அதனை எப்படி அவர் சமாளித்தார் என்பது குறித்தும் பார்க்கலாம்.
கீழே விழுந்த ஜெய்சங்கர்
ஜெய்சங்கர் ஒரு நாடகத்தில் மன்னராக நடித்துக்கொண்டிருந்தார். அந்த நாடகத்தை எம்.ஜி.ஆர் தலைமை தாங்கினார். அப்போது மேடையில் இருந்த ஒரு நாற்காலியில் மூன்று கால்கள் மட்டுமே இருந்திருக்கிறது. மீதம் ஒரு காலுக்கு பதில் செங்கல்களை அடுக்கி வைத்து அண்டக்கொடுத்திருந்தார்கள்.
இதையும் படிங்க: “இவுங்களை நம்பியா கட்சி தொடங்கப்போற”… ராமராஜனை கவுண்ட்டர் அடித்து கலாய்த்த கவுண்டமணி…
அந்த நாற்காலியில் ஜெய்சங்கர் அமர்ந்து பேசுவது போன்ற ஒரு காட்சி எழுதப்பட்டிருந்தது. மன்னராக நடித்துக்கொண்டிருந்த ஜெய்சங்கர் அந்த காட்சியில் கம்பீரமாக அந்த நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது செங்கல் தடுமாறி கீழே விழுந்துவிட்டாராம். இதனை சமாளிக்கும் வகையில் ஜெய்சங்கர் உடனே எழுந்து “எதிரிகள் எனது நாற்காலியை பறிப்பதற்காக சூழ்ச்சி செய்யலாம். என்ன செய்தாலும் நான் வெற்றி காண்பேன்” என வசனம் பேசி அந்த சூழலை அப்படியே சமயோஜிதமாக சமாளித்தாராம். இதனை பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் கைத்தட்டி பாராட்டினாராம்.