முதல் படத்திலேயே சிவாஜி , எம்ஜிஆருடன் ஏற்பட்ட மோதல்!.. ஜெய்சங்கர் வாழ்க்கையில் நடந்த திக் திக் நிமிடங்கள்!..
தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ஜெய்சங்கர். வெள்ளிக்கிழமை நாயகன் என்றும் அழைக்கப்படுவார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஜெய்சங்கரின் படம் ரிலீஸ் ஆகும். அந்த அளவுக்கு வருடத்திற்கு ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.
அதனாலேயே வெள்ளிக்கிழமை நாயகன் என்று அழைக்கப்பட்டார். இவர் சட்டம் படிக்க அவரது வீட்டார் நினைத்தார்கள். ஆனால் ஜெய்சங்கரோ சினிமா மீதுள்ள காதலால் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டார். அதன் பின் நாடகக் கம்பெனியில் இணைந்து பல நாடகங்களில் நடித்து வந்தார் ஜெய்சங்கர்.
இவர் கல்லூரியில் படிக்கும் போதே நடிகர் சோவும் அதே கல்லூரியில் படிக்க இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இதன் மூலம் சோவின் நாடகக் கம்பெனியில் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார் ஜெய்சங்கர். ஒரு சமயத்தில் அந்த நாடகக் கம்பெனியில் இருந்து விலகி வேறொரு நாடகக் கம்பெனியில் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார்.
ஒரு நாள் ஜெய்சங்கரின் நாடகத்தை வாலி பார்த்து அவரின் நடிப்பை பாராட்டி ஏன் நீ வெள்ளித்திரையில் முயற்சி செய்யக்கூடாது என்று கேட்டாராம். அதன் பிறகே ஜெய்சங்கருக்கு வெள்ளித்திரையில் நடிக்க ஆசை வந்திருக்கிறது. ஒரு முறை ஜெய்சங்கர் நடித்த மற்றுமொரு நாடகத்தை பார்க்க எம்ஜிஆர், நாகி ரெட்டி ஆகியோர் பார்த்து வியந்து பாராட்டினார்களாம்.
இதையும் படிங்க :வயிராற சாப்பாடு போடுறவர்!.. ஒட்டுமொத்த யுனிட்டையும் பட்டினியில் போட்ட கேப்டன்.. காரணமாக இருந்த சிறுவன்,,
அதில் நாகிரெட்டி ஜெய்சங்கரை பார்த்து விரைவில் உன்னை வெள்ளித்திரையில் பார்க்கிறேன் என்று சொல்ல அவர் சொன்ன வார்த்தை பலித்தது. சிவாஜி நடிப்பில் மருத நாட்டு வீரன் படத்தில் ஜெய்சங்கர் இரண்டாவது நாயகனாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஜெய்சங்கர் வீட்டில் ஆவலுடன் நம்மை அழைத்து போக கார் வரும் என எதிர்பார்த்துக் கொண்டே இருக்க கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
மருத நாட்டு வீரன் படத்தில் ஜெய்சங்கருக்கு பதிலாக இன்னொரு நாயகன் நடித்திருக்கிறார். இதை அறிந்த ஜெய்சங்கர் அப்படியே இடிந்து போனாராம். இன்னும் சினிமாவை நம்பினால் சரி வராது என டில்லிக்கு ஒர் வேலைக்காக புறப்பட்டு சென்று விட்டார். இருந்தாலும் சினிமா மீதுள்ள ஆர்வம் அவரை விடவில்லை. இரவும் பகலும் படத்திற்காக இயக்குனர் ஜோசப் தலியத் புதுமுக நடிகரை தேடிக் கொண்டிருக்க ஜெய்சங்கர் அந்த படத்தின் நாயகனாக ஒப்பந்தமானார்.
படமும் முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்க இரவும் பகலும் படத்தோடு எம்ஜிஆரின் ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ படமும் சிவாஜியின் ‘பழனி’ திரைப்படமும் ஒன்றாக பொங்கல் அன்று ரிலீஸாக உள்ளதாக செய்திகள் வெளியானது. இதை கேட்டதும் ஜெய்சங்கருக்கு மனதில் ஒரு கலக்கம் இருந்தது. முதல் படமே இப்படி மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் மோதும் நிலையில் உள்ளது என்று சிறிது கலக்கத்தில் இருந்தாராம்.
இருந்தாலும் ரிலீஸ் அன்றைக்கு தியேட்டரில் மக்களுடன் மக்களாக இரவும் பகலும் படத்தை ஜெய்சங்கர் பார்க்க மகிழ்ச்சியில் திகைத்து போனார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு இரவும் பகலும் படத்தை மக்கள் ரசித்து பார்க்க தொடங்கினார்கள். படமும் மாபெரும் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ஜெய்சங்கர். கிட்டத்தட்ட 10 வருடங்களாக கதா நாயகனாக கொடிகட்டி பறந்தார். இந்த செய்தியை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.