சிவாஜியுடன் நடிக்க தயாரான ஜெய்ஷங்கர்… ஆனால் மிஞ்சியதோ ஏமாற்றம்… இப்படி ஆகிடுச்சே!!
தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த ஜெய்ஷங்கர், தனது பள்ளிக்காலங்களில் தீவிரமான சிவாஜி ரசிகராக இருந்தார். சிவாஜி திரைப்படங்களில் இடம்பெறும் வசனங்களை அப்படியே மனப்பாடமாக பேசிக்காட்டுவாராம் ஜெய்ஷங்கர்.
சோ.ராமசாமி, ஜெய்ஷங்கருடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர். ஆதலால் ஜெய்ஷங்கருக்கு சோவின் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறு பல நாடகங்களில் நடித்து வந்த ஜெய்ஷங்கருக்கு, அவரே எதிர்பாராத விதமாக “மருதநாட்டு வீரன்” என்ற திரைப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தது.
பள்ளிக்காலங்களில் சிவாஜியின் தீவிர ரசிகராக இருந்த ஜெய்ஷங்கருக்கு, சிவாஜியுடனே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தது அவருக்கு குதூகலத்தை தந்தது. “மருதநாட்டு வீரன்” திரைப்படத்தின் தயாரிப்பாளரைச் சென்று சந்தித்தார் ஜெய்ஷங்கர். அப்போது அத்திரைப்படத்தில் ஜெய்ஷங்கர் அணிய இருந்த ஆடைகளுக்கான அளவுகளை எடுத்தனர். மேலும் ஒரு குறிப்பிட்ட தேதியைச் சொல்லி “இந்த நாளில் தவறாமல் படப்பிடிப்புக்கு வந்துவிடு” என ஜெய்ஷங்கரிடம் கூறினார் தயாரிப்பாளர்.
படப்பிடிப்புக்கான நாளும் வந்தது. ஜெய்ஷங்கர் அன்று அதிகாலையிலேயே படப்பிடிப்பிற்குச் செல்ல தயாரானார். ஆனால் வெகு நேரம் காத்திருந்தும், அவரை அழைத்துச் செல்ல கார் வரவில்லை.
வெகு நேரமாக கார் வரவில்லை என்றதும், படப்பிடிப்பு நடைபெறும் ஸ்டூடியோவுக்கு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு பேசினார் ஜெய்ஷங்கர். அப்போதுதான் அந்த தகவல் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. அதாவது அவர் நடிக்க இருந்த கதாப்பாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை சிவாஜி கணேசன் தேர்வுசெய்துவிட்டார் என அவரிடம் படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.
ஜெய்ஷங்கருக்கு அதிர்ச்சி தாங்கமுடியவில்லை. தனது மானசீக நடிகரான சிவாஜி கணேசனே தன்னை படத்தில் இருந்து நீக்கியது அவருக்கு பெருத்த சோகத்தையும் ஏமாற்றத்தையும் அளித்தது. அதன் பின் பல வருடங்கள் கழித்து “குலமா குணமா” என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் ஜெய்ஷங்கர் இணைந்து நடித்தார்.
அத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அவருக்கு ஒரு உண்மை தெரியவந்ததாம். அதாவது “மருதநாட்டு வீரன்” திரைப்படத்தில் இருந்து தன்னை நீக்கியது சிவாஜி கணேசன் இல்லை எனவும், சிவாஜி கணேசனிடம் ஜெய்ஷங்கரின் பெயரையே சொல்லப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த உண்மையால் ஓரளவு ஆசுவாசம் அடைந்தாராம் ஜெய்ஷங்கர்.