படம் வெளியான பின்பும் படப்பிடிப்பு நடத்திய சத்யராஜ் பட இயக்குனர்… இது ரொம்ப புதுசா இருக்கே!!
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சத்யராஜ், கோயம்பத்துரில் பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். ஆயினும் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் சத்யராஜ்ஜின் தாயாருக்கு அதில் விருப்பம் இல்லை. எனினும் தனது பெற்றோரின் விருப்பத்தையும் மீறி சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடி அலைந்தார் சத்யராஜ். அதன் பின் ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வில்லன் வேடத்தில் பல திரைப்படங்களில் நடித்த சத்யராஜ், பின்னாளில் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஹீரோவாக திகழ்ந்தார்.
இதனிடையே 1987 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு’. இத்திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். சித்ரா லட்சுமணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது.
இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் ரசிக்கும்படியாக அமைந்தது. குறிப்பாக “காதல் கிழியே” என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “காதல் கிழியே” பாடலை படமாக்கிகொண்டிருந்தபோது சத்யராஜ்ஜுக்கு ஒரு தயக்கம் ஏற்பட்டதாம். அதாவது இத்தனை நாள் நாம் வில்லனாக நடித்துவிட்டோம், இப்போது நாம் கதாநாயகியை கட்டிப்பிடித்து டூயட் பாடினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் சத்யராஜ்ஜிற்கு இருந்ததாம். ஆதலால் அந்த பாடலை படத்தில் இடம்பெறச் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்த படக்குழுவினர், அந்த பாடலை பாதி படமாக்கியதோடு நிறுத்திவிட்டார்களாம்.
“ஜல்லிக்கட்டு” திரைப்படம் வெளியாகி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பிறகுதான் அந்த பாடலை மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற முடிவுக்கு வந்தார்களாம் படக்குழுவினர். ஆதலால் மீண்டும் அந்த பாடல் காட்சியை முழுவதுமாக படமாக்கினார்களாம். அதன் பின் படம் வெளியான 4 ஆவது வாரத்திற்கு பிறகு அந்த பாடலை படத்தில் இணைத்தார்களாம்.