காதலி நடித்த படம்… டிக்கெட் கிடைக்காமல் திணறிய எம்.ஜி.ஆர்… கடைசியில் என்ன பண்ணார் தெரியுமா??
மக்களின் மனதில் “புரட்சித் தலைவர்” ஆக இப்போதும் திகழ்ந்து வரும் எம்.ஜி.ஆர், தனது சினிமா வாழ்க்கையின் தொடக்க காலத்தில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே உடல்நலம் சரியில்லாமல் பார்கவி உயிரிழந்தார்.
அதன் பின் சதானந்தவதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் எம்.ஜி.ஆர். திருமணமான சில வருடங்கள் கழித்து சதானந்தவதியும் இயற்கை எய்தினார். இந்த காலகட்டம்தான் எம்.ஜி.ஆர் தமிழின் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வந்த காலகட்டம்.
அப்போது சேலத்தில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரது நண்பரான ரா.வெங்கடசாமி என்பவரிடம், “அருகில் உள்ள திரையரங்குகளில் ஒரு திரைப்படம் ஓடுகிறது. இதனை எப்படியாவது பார்க்கவேண்டும். இதற்கு டிக்கெட் வாங்கித்தர முடியுமா?” என கேட்டாராம்.
உடனே அவரது நண்பர், ஓரீயன்ட்டல் டாக்கீஸ் என்ற திரையரங்கிற்கு தொலைப்பேசியில் அழைத்து “எம்ஜிஆர் படம் பார்க்க வேண்டும் என கூறுகிறார். இரண்டு டிக்கெட்டுகள் கிடைக்குமா?” என கேட்டார். அதற்கு அந்த திரையரங்கின் உரிமையாளர் “டிக்கெட் எல்லாம் தீர்ந்துவிட்டதே” என கூறிவிட்டார்.
ஆனால் நண்பர் விடாபிடியாக “எப்படியாவது இரண்டு டிக்கெட்டுகள் வேண்டும்” என கூறினாராம். அதற்கு உரிமையாளர் “திரையரங்கில் இருக்கும் அறையில் வேண்டுமானால் இரண்டு சீட்டுகளை கொண்டு வந்து போடச்சொல்கிறேன். எம்.ஜி.ஆர் அறையில் உட்கார்ந்துக்கொண்டு பார்ப்பாரா?” என கேட்டாராம்.
“எம்.ஜி.ஆர் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்” என முதலில் நினைத்தார் வெங்கடசாமி. எதற்கும் கேட்டுப்பார்க்கலாம் என நினைத்து எம்.ஜி.ஆரிடம் “திரையரங்கில் இருக்கும் ஒரு அறையில் இருந்துகொண்டு படம் பார்க்க உங்களுக்கு சம்மதமா?” என கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர், உடனே சம்மதம் என தலையாட்டினாராம். அதன் பின் எம்.ஜி.ஆர். திரையரங்கிற்குச் சென்று திரையரங்கின் கேபினில் இருந்தே படம் பார்த்திருக்கிறார்.
டிக்கெட் இல்லை என்றாலும் பரவாயில்லை, எப்படியாவது அத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என எம்.ஜி.ஆர் துடித்தது எதற்காக என்றால், அத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் வி.என்.ஜானகி.
எம்.ஜி.ஆர் அக்காலத்தில் வி.என்.ஜானகியை காதலித்து வந்தாராம். இதில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், அத்திரைப்படத்தை பார்க்க உதவி செய்த அவரது நண்பருக்கு எம்.ஜி.ஆர், ஜானகியை காதலிக்கிறார் எனவும் ஆதலால்தான் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று துடிக்கிறார் எனவும் ஏற்கனவே தெரியுமாம்.