முன்பெல்லாம் ஒரு சினிமா தொடர்பான செய்திகளில் அந்த நடிகரின் ரசிகர்கள்தான் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் ஜனநாயகன் படம் சென்சாரில் சிக்கி அது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சியில் வெளியாகும் போது பொதுமக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள்.. அதில் பலரும் விஜய்க்கு ஆதரவாகவே கருத்து தெரிவிக்கிறார்கள்.. தணிக்கை வாரியம் இந்த படத்தை நிறுத்தி வைத்ததற்கு பல காரணங்களை சொன்னாலும் ரசிகர்களும், பொதுமக்களும் அதை ஏற்க தயாராக இல்லை. இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவே அவர்கள் நம்புகிறார்கள்.
ஜனநாயகன் திரைப்படத்தை கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தணிக்கை அதிகாரிகள் பார்த்திருக்கிறார்கள்.. 19ம் தேதி இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுப்பதாக தயாரிப்பாளரிடம் தணிக்கை அதிகாரிகள் சொல்லி விட்டார்கள். எனவே தயாரிப்பாளரும் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்.. ஆனால் அதன்பின் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் எந்த அப்டேட்டும் இல்லை. தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேட்டபோது ‘ஒரு தணிக்கை அதிகாரி புகார் தெரிவித்திருக்கிறார்.. எனவே மறுதணிக்கை செய்ய வேண்டும்’ என தணிக்கை தரப்பு சொல்லியிருக்கிறது. ரிலீஸுக்கு வெறும் 3 நாட்களே இருந்த நிலையில் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா ‘படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுப்பதாக சொல்லிவிட்டு மீண்டும் மறு தணிக்கை என சொல்வதை ஏற்க முடியாது.. ஏற்கனவே கூறியபடி யுஏ சான்றிதழை கொடுங்கள்’ என தீர்ப்பளித்தார். ஆனால், இதை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அமர்வு தனி நீதிபதி பி.டி ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதித்தது. அதன்பின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது.. ஆனால், ‘வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது.. அப்படி இருக்கும்போது இங்கே ஏன் வந்தீர்கள்?.. அங்கு உங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இங்கு வாருங்கள்’ என சொல்லி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திலேயே விசாரிக்கலாம் என சொல்லிவிட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பான விசரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.. இரு தரப்பும் தங்களின் வாதங்களை முன் வைத்தன.. அன்றே தீர்ப்பை சொல்ல திட்டமிட்டிருந்தார் நீதிபதி.. ஆனால் இரு தரப்பும் வாதங்களை முன்வைக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார் நீதிபதி.

இந்நிலையில்தான் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதித்தார்.. அதற்கு அவர்கள் சொன்ன முக்கிய காரணம் தணிக்கை வாரியத்துக்கு பதிலளிக்க போதுமான அவகாசத்தை தனி நீதிபதி கொடுக்கவில்லை என்பதுதான்.. தற்போது இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பிடி ஆஷாவே விசாரிக்கவுள்ளார்.. அப்போது தணிக்கை வாரியத்திற்கு அவர் போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
அதாவது இந்த விழக்கு மீண்டும் இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி பீடி ஆஷாவிடமே வந்து நிற்கிறது. எனவே ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை.. இடையில் 18 நாட்கள் வீணாய் போய்விட்டது. இந்த தீர்ப்பு வந்தபின் ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் ‘இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம். தனி நீதிபதி தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் கொடுத்திருந்தால் மறு தணிக்கை செய்து படம் எப்போதோ படம் வெளியாகியிருக்கும்.. தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதி சென்று காலதாமதம் ஆகிவிட்டது’ என பதிவிட்டு வருகிறார்கள்.




