விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஒருபக்கம் இந்த விஷயம் விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலே அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அவர்களின் திரைப்படங்களை சரியாக ரிலீஸ் செய்ய முடியாது. இதை யார் சந்தித்தார்களோ இல்லையோ விஜய் பலமுறை சந்தித்திருக்கிறார். அவரின் புலி, மெர்சல், தலைவா, கத்தி போன்ற படங்கள் வெளியான போது அவர் பிரச்சினைகளை சந்தித்தார்.
தற்போது அவர் முழு அரசியல்வாதியாக மாறியிருக்கும் நிலையில்தான் அவரின் ஜனநாயகம் திரைப்படம் சிக்கலை சந்தித்திருக்கிறது. இன்னமும் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.

சென்சார் கொடுக்கப்படாமல் இருப்பதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல் என்றே விஜய் ரசிகர்கள் நினைக்கிறார்கள். தவெக தலைவர் விஜய் தான் பேசும் அரசியல் மேடைகளில் பாஜகவை தனது கொள்கை எதிரி என விமர்சித்து வருகிறார். ஒருபக்கம் விஜயை அதிமுக-பாஜக கூட்டணிக்கு இழுக்கும் வேலையும் நடந்து வருகிறது.
அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்பதற்காகவே இப்படி மிரட்டி பார்க்கிறார்கள் என சிலர் பேசுகிறார்கள். ஒரு சிலரோ ‘இவர் செய்வது விஜய்க்கு பலனாக அமையும். ஏனெனில் தவெகவை பாஜகவின் B டீம் என விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர் பாஜகவை எதிர்ப்பதால்தான் சென்சார் மூலம் அவருக்கு பிரச்சனை கொடுக்கிறார்கள், இதன் மூலம் அவர் பாஜகவின் எதிரி என்கிற இமேஜ் மக்களிடையே உருவாகும். இது அவருக்கு நல்லதுதான்’ என்கிறார்கள்.
நடக்கும் பிரச்சனைகளை பார்க்கும்போது ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகுமா அல்லது ஒருநாள் கழித்து அதாவது 10ம் தேதி வெளியாகுமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ஜனநாயகன் டிக்கெட் முன் பதிவும் வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
