திட்டிய ஆசிரியை.. ஒரேநாளில் முடிந்த ஜெ.வின் கல்லூரி வாழ்க்கை.. நடந்தது இதுதான்!...

by சிவா |   ( Updated:2023-05-31 08:35:39  )
JAYA_main_cine
X

jayalalitha

நடிகையாக இருந்து தமிழக முதல்வராக மாறியவர் ஜெயலலிதா. இவரின் அம்மா சந்தியா பல படங்களில் நடித்தவர். குடும்பசூழ்நிலை காரணமாக ஜெயலலிதா சிறுமியாக இருக்கும்போதே அவருடன் நேரம் செலவழிக்க முடியாமல் சந்தியா சினிமாவில் நடித்தவர். ஜெயலலிதா சர்ச் பார்க் காண்வெண்ட் பள்ளியில் படித்தார். ஜெயலலிதா படிப்பில் செம சுட்டி. எப்போதும் எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண் எடுப்பார். அதனால், அந்த பள்ளி ஆசிரியைகளுக்கு மிகவும் பிடித்த செல்ல மாணவியாக இருந்தவர்.

படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர் ஜெயலலிதா. நன்றாக படித்து பேராசிரியராக வேண்டும் அல்லது எழுத்தாளராக வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. ஆனால், அவரின் குடும்பசூழ்நிலை அவரை சினிமாவை நோக்கி தள்ளியது. ஜெயலலிதா நடிக்க வேண்டும் என அவரின் அம்மா சந்தியா ஆசைப்பட்டார். ஆனால், ஜெயலலிதாவுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனாலும், குடும்ப சூழ்நிலை மற்றும் அம்மா வற்புறுத்தியதால் நடிக்க முடிவெடுத்தார்.

சர்ச்பார்க் பள்ளியில் படிக்கும் பெண்கள் அங்கு படிப்பை முடித்ததும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிப்பார்கள். ஜெயலலிதாவுக்கும் அந்த ஆசை இருந்தது. ஆனால், சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டதால் அதற்கான விண்ணப்பத்தை கூட அவரால் வாங்க முடியவில்லை. எனவே, அவருக்காக அவரின் தோழி ஸ்ரீமதி என்பவர் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பினார். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கியவர் என்பதால் ஜெயலலிதாவுக்கு அந்த கல்லூரியில் இடமும் கிடைத்தது.

jayalalitha

ஒருநாள் படப்பிடிப்பிலிருந்து நேராக கல்லூரிக்கு சென்றார். அவரின் கையில் புத்தகம் கூட எதுவும் இல்லை. அப்போது சுசீலா மேரி என்கிற ஆசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஜெயலலிதா பற்றி எதுவுமே தெரியாது. ஜெயலலிதாவை பார்த்ததும் ‘புத்தகம் கூட இல்லமால் பொம்மை மாதிரி மேக்கப் பண்ணிட்டு இங்கு எதுக்கு வந்த?’ என திட்டியுள்ளார். ஜெயலலிதாவுக்கு சங்கடமாக போய்விட்டது. வகுப்பில் போய் அமர்ந்தார். உணவு இடைவேளை வந்தது. அப்போது வீட்டிக்கு சென்றவர்தான். அதன்பின் அவர் கல்லூரிக்கே செல்லவில்லை.

ஒரேநாளில் ஜெயலலிதாவின் கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த தகவலை ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story