ஜெயலலிதா படத்திற்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட்!.. அறிமுகமான முதல் படத்தையே பார்க்க முடியாமல் போன சோகம்!..
நடிகை, அரசியல்வாதி, முதலமைச்சர் என தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜெயலலிதா. நடிக்க விருப்பமில்லாமல் அம்மா வற்புறுத்தியதால் சினிமாவில் நடிக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. 1965ம் வருடம் வெளியான வெண்ணிற ஆடை படத்தில்தான் ஜெயலலிதா அறிமுகமானார். அப்போது அவருக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கியிருந்தார்.
ஆனால், இந்த படத்தை ஜெயலலிதாவால் தியேட்டரில் சென்று பார்க்கமுடியாமல் போனதுதான் சோகம். ஏனெனில், இந்த படத்தில் கொஞ்சம் கவர்ச்சியான உடையில் அவர் ஒரு அருவியில் குளிப்பது போலவும், நடனமாடுவது போலவும் ஒரு பாடல் காட்சி வரும்.
இதனால் இந்த படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழை கொடுத்துவிட்டனர். இதனால், ஜெயலலிதாவால் தான் நடித்த முதல் படத்தையே தியேட்டருக்கு சென்று பார்க்க முடியாமல் போனது. அதேபோல், மெல்லிய துணி அணிந்து நீர் வீழ்ச்சியின் கீழ் ஆடிய முதல் நடிகையும் இவர்தான்.
அதேநேரம், வெண்ணிற ஆடை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. பல தியேட்டர்களில் நூறு நாட்களும் ஓடியது. ஒரே நாளில் தமிழ் சினிமா நட்சத்திரமாகவும் ஜெயலலிதா மாறினார். அதேபோல், அடுத்த படமே எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா நடித்தார். அதன்பின் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜெயலலிதா நடித்தது குறிப்பிடத்தக்கது.