என்னை கல்யாணம் பண்ணிக்கோ இல்லனா தற்கொலை பண்ணிக்குவேன்!. ஜெயலலிதாவுக்கு ரசிகர் எழுதிய கடிதம்...
வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஜெயலலிதா. அடுத்த படமே எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். எம்.ஜி.ஆர் - சிவாஜி ஜோடி ரசிகர்களால் ரசிக்கப்பட்டதாலும், அந்த படங்கள் பெரிய வெற்றியை பெற்றதாலும் எம்.ஜி.ஆருடன் தொடர்ந்து நடித்தார்.
ஒருகட்டத்தில் சிவாஜி, ஜெய் சங்கர், முத்துராமன் உள்ளிட்ட சில ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். அதன்பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு சென்றார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை கைப்பற்றி தமிழகத்தின் முதல்வராகவும் மாறினார்.
இவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது இவருக்கு ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார். அந்த நிலையில்தான் ஒரு ரசிகரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் ‘நான் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த நாளுக்குள் நீங்கள் சம்மதிக்கவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என அவர் எழுதியிருந்தார். ஜெயலலிதா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
சில நாட்கள் கழித்து அந்த ரசிகரிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது. ‘இந்த தேதிக்குள் என்னை நீங்கள் திருமணம் செய்ய நீங்கள் சம்மதிக்க வேண்டும். இல்லையெனில் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என அவர் எழுதியிருந்தார். ஜெயலலிதா அதற்கும் பதிலளிக்கவில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த தேதிக்குள் சம்மதிக்கவில்லை எனில் தற்கொலை செய்துகொள்வேன் என அந்த ரசிகர் எழுதியிருந்தார்.
இந்தமுறை அவருக்கு பதில் கடிதம் எழுதிய ஜெயலலிதா ‘எனக்கு கணவராக வருபவர் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராக இருக்க வேண்டும். மற்ற விஷயங்களை விட கொடுத்த வாக்கை காப்பாற்றுவது முக்கியம். கொடுத்த வாக்கை காப்பாற்றமல் மீண்டும் மீண்டும் மீறும் உங்களை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்’ என அவரின் பாணியிலேயே பதில் எழுதி பாடம் புகட்டினார் ஜெயலலிதா.
70களில் ஜெயலலிதா ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை எழுதினார். அதில்தான் இந்த தகவலை அவர் பகிர்ந்ததது குறிப்பிடத்தக்கது.