“அந்த எழுத்தாளரை கேட்காம ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்”.. மனம் திறந்த வெற்றிமாறன்
வெற்றிமாறன் சமீப காலமாக சில நாவல்களையும் சிறுகதைகளையும் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். எம். சந்திரகுமார் என்பவர் எழுதிய “லாக் அப்” என்ற நாவலை தழுவி “விசாரணை” திரைப்படத்தை உருவாக்கினார் வெற்றிமாறன்.
அதனை தொடர்ந்து பூமணி எழுதிய “வெக்கை” நாவலை “அசுரன்” திரைப்படமாக உருவாக்கி அசுர வெற்றியை கொடுத்தார். அதன் பின் தற்போது ஜெயமோகன் எழுதிய “துணைவன்” சிறுகதையை தழுவி “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்த வெற்றி மாறன், தான் செய்த முக்கியமான தவறு ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “ஜெயமோகன் எழுதிய கைதிகள் என்ற சிறுகதையை நான் படித்தேன், அந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனை நான் திரைப்படமாக உருவாக்க நினைத்து அதற்கான ஸ்கிரிப்ட்டை எழுத தொடங்கினேன்.
ஆனால் அந்த கதையின் உரிமம் இன்னொருவருக்கு போய்விட்டது. நான் எப்போதுமே ஒரு எழுத்தாளரின் கதையை திரைப்படமாக உருவாக்க ஸ்கிரிப்ட் எழுத தொடங்கும் முன் அந்த எழுத்தாளரிடம் அனுமதி கேட்டு தான் எழுத தொடங்குவேன்.
ஆனால் நான் அந்த முறை அதனை பற்றி யோசிக்காமல் எழுத தொடங்கிவிட்டேன். அதன் பிறகு தான் தெரிந்தது அந்த கதையை திரைப்படமாக்கும் உரிமம் ஏற்கனவே வேறு ஒருவருக்குச் சென்றுவிட்டது என்று” என கூறியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “கைதிகள்” சிறுகதையை இதற்கு முன் மணி ரத்னம், பாலா ஆகியோர் திரைப்படமாக எடுக்க அனுமதி கேட்டிருந்தும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.