சினிமாவில் நுழைந்து வாய்ப்புகள் கிடைத்து ஹீரோவாக நடிப்பதெல்லாம் அவ்வளவு சுலபத்தில் நடந்துவிடாது. பல வாய்ப்புகள் இருக்கும் இந்த காலத்திலேயே வாய்ப்புகள் சுலபமாக கிடைத்துவிடுவதில்லை. தயாரிப்பாளரின் மகனாக இருந்தால் சுலபமாக ஹீரோ ஆகலாம். அதேபோல், தனது அப்பா பெரிய இயக்குனர் அல்லது நடிகரின் மகனாக இருந்தால் ஹீரோ ஆகலாம். அப்படித்தான் இப்போது பலரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
1950களில் நிலைமை இப்படி இல்லை. நாடகங்களில் பல வருடங்கள் நடித்து அனுபவம் பெற்றவர்களுக்குதான் அப்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். அப்படி சினிமாவில் நுழைந்தாலும் ஹீரோ வாய்ப்பு கிடைக்கும் என சொல்ல முடியாது. ஏனெனில், அதை தடுக்க பலரும் காத்திருப்பார்கள். ஓடும் குதிரை அதாவது அப்போது பிரபலமாக இருக்கும் ஹீரோக்களை போட்டு மட்டுமே படமெடுப்பார்கள்.
இதையும் படிங்க: பாடல் வரிகளால் வந்த கோபம்!.. படப்பிடிப்பை நிறுத்திய எம்.ஜி.ஆர்!… அட அந்த படமா!…
ஏழு வயதில் நாடகங்களில் நடிக்க துவங்கிய எம்.ஜி.ஆர் 37வது வயதில் சினிமாவில் நுழைந்தார். சுமார் 10 வருடங்கள் அப்போது முன்னணி ஹீரோக்களாக இருந்த தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், ரஞ்சன், எம்.கே.ராதா, பி.யூ. சின்னப்பா போன்ற நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
அதன்பின்னரே ராஜகுமாரி என்கிற படத்தில் அவருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமிக்கும், வசனகர்த்தா கருணாநிதிக்கும் முதல் திரைப்படம். ஆனால், 5 ஆயிரம் அடி படம் எடுத்தபின்னர் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மொய்தீன் பட வியாபாரம் தொடர்பாக பேசிய போது எம்.ஜி.ஆர் ஹீரோ என்பதால் வினியோகஸ்தர்கள் படத்தை வாங்க தயங்கினார்கள். எனவே படம் வியாபாரம் ஆகவில்லை.
எனவே, எடுத்தவரை நிறுத்திவிட்டு பி.யூ. சின்னப்பாவை ஹீரோவை போட்டு படத்தை மீண்டும் எடுக்கலாம் என முடிவு செய்தார் மொய்தீன். இதைக்கேட்டதும் ஏ.எஸ்.ஏ சாமி அதிர்ச்சி அடைந்தார். எம்.ஜி.ஆர் நன்றாக நடித்திருக்கிறார். நன்றாக சண்டை போட்டிருக்கிறார். இன்னும் ஆறாயிரம் அடி எடுத்துவிடுகிறேன். எல்லாம் கம்பெனி நடிகர்கள், சொந்த ஸ்டுடியோ எனவே செலவு அதிகம் ஆகாது என சொல்லி தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்தார். தன்னை படத்திலிருந்து தூக்க ஆலோசனை நடந்ததை கேட்டு வேதனை அடைந்தார் எம்.ஜி.ஆர்.
படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. எம்.ஜி.ஆர் எனும் கதாநாயகன் உருவாக விதை போட்ட படமாக ராஜகுமாரி அமைந்தது. அதன்பின் நாடோடி மன்னன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார் எம்.ஜி.ஆர்.