Cinema History
ரசிகர்கள் விரும்பாத நாகேஷ் – பத்மினி ஜோடி!.. அதே கதையை வேறலெவலில் காட்டி ஹிட் கொடுத்த பாலச்சந்தர்
1967ல் வெளியான படம் எங்களுக்கும் காலம் வரும். இந்தப் படத்தில் நாம் இதுவரை பார்த்திராத வகையில் வித்தியாசமான ஜோடியைக் காட்டினார்கள். அது யாரும் முற்றிலும் எதிர்பார்க்காத ஜோடி. நாகேஷ் – பத்மினி. என்னடா இது சிவாஜி – பத்மினி ஜோடியைத் தான் நாம் எப்போதும் சிலாகித்து சொல்வோம்.
இதென்ன நாகேஷ் – பத்மினி என்கிறீர்களா? இந்தப் படம் பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை. இந்தப் படத்திற்கும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய எதிர்நீச்சல் படத்திற்கும் ரொம்பவே தொடர்பு உண்டு. வாங்க, என்னென்னு பார்க்கலாம்.
எதிர்நீச்சல் படத்தில் மாடி வீட்டு மாதுவாக வந்து நாகேஷ் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு விடுவார். படத்தில் வழக்கத்திற்கு மாறாக குணச்சித்திரம் கலந்த ஹீரோயிசத்தைக் காட்டி அசத்தியிருப்பார். ரசிகர்களிடம் இருந்து அனுதாபங்களை அள்ளிச் சென்று இருப்பார். அந்த கடினமான நடிப்பையும் அசால்டாக நடித்து அசத்தியிருப்பார் நாகேஷ். அதனால் தான் பாலசந்தர் அடிக்கடி, கமலிடம் நாகேஷின் நடிப்பைப் பற்றி பெருமையாகச் சொல்வாராம்.
அதே போல எங்களுக்கும் காலம் வரும் படத்தில் நாகேஷ் ஒரு அப்பாவி. வேலைக்காரன் வேடத்தில் வருகிறார். அதே வீட்டு சமையல்காரியாக பத்மினி வருகிறாள். நாகேஷூக்கு இது சீரியஸான ரோல் தான். இந்தப்படத்தில் அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அதே போல பத்மினி, டிஎஸ்;.பாலையா நடிப்பும் பாராட்டப்பட்டது. படம் தான் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை.
ஆனால் அதே கதையைத் தூசுதட்டி பாலசந்தர் எடுத்தார். அந்தப் படத்தில் வந்த சில தவறுகளை நீக்கி சுவாரசியமான படமாக எடுத்தார். அதுதான் எதிர்நீச்சல். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. 1967ல் ஏ.வின்சென்ட் இயக்கிய படம் எங்களுக்கும் காலம் வரும். இதில் நாகேஷ், பத்மினி, டிஎஸ்.பாலையா, சச்சு உள்பட பலர் நடித்துள்ளனர். டி.கே.ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார். இது ஒரு பெங்காலி கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.
1968ல் கே.பாலசந்தர் இயக்கிய படம் எதிர்நீச்சல். நாகேஷ், ஜெயந்தி, சௌகார் ஜானகி, முத்துராமன், மேஜர் சுந்தரராஜன், எஸ்.என்.லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். வி.குமார் இசை அமைத்துள்ளார். படத்தில் நாகேஷின் நடிப்பு பிரமாதமாக இருக்கும். இதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம். பாடல்களும் மாஸாக இருக்கும். அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா, வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா, தாமரைக் கன்னங்கள் ஆகிய தேன் சிந்தும் பாடல்கள்; இந்தப் படத்தில் தான் வருகிறது.