“செருப்பால அடிப்பேன்”… ரஜினியிடம் எரிமலையாய் வெடித்த பாலச்சந்தர்… என்னவா இருக்கும்!!
ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், பாலச்சந்தர் இயக்கிய “ஆபூர்வ ராகங்கள்” திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ரஜினிகாந்த் என்றுமே பாலச்சந்தரை தனது குருவாக நினைப்பவர். அந்த அளவுக்கு ரஜினியின் வளர்ச்சியில் பாலச்சந்தருக்கு பங்கு உண்டு.
“அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தை தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்தில் “மூன்று முடிச்சு”, “அவர்கள்”, “நினைத்தாலே இனிக்கும்”, “தில்லு முல்லு” போன்ற பல திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
இதனிடையே 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தப்புத் தாளங்கள்”. இத்திரைப்படத்தை பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.
“தப்புத் தாளங்கள்” திரைப்படம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாக்கப்பட்டது. கன்னடத்தில் “தப்பிட தாளா” என்ற பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்துவிட்டு மாலை 6 மணி அளவில் அவரது ஹோட்டல் அறைக்குத் திரும்பினார். அறையில் கொஞ்சம் மது அருந்திவிட்டு தூங்கிவிட்டாராம்.
அன்று இரவு 10 மணிக்கு, படப்பிடிப்பு தளத்தில் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. “ஒரு காட்சி விட்டுப்போய்விட்டது, அதனை எடுக்கவேண்டும். படப்பிடிப்புக்கு வாருங்கள்” என அழைத்திருக்கிறார்கள். மது அருந்தியுள்ளதால் ரஜினிகாந்த்திற்கு படப்பிடிப்பிற்குச் செல்ல தயக்கமாக இருந்திருக்கிறது. எனினும் சமாளித்துக்கொள்ளலாம் என படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளார்.
படப்பிடிப்பில் பாலச்சந்தரின் அருகே செல்வதை தவிர்த்துவிட்டால் தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால் பாலச்சந்தர், ரஜினிகாந்த் மது அருந்திவிட்டு வந்திருந்ததை கண்டுபிடித்துவிட்டார்.
அப்போது ரஜினிகாந்த்தை தனியாக அழைத்த பாலச்சந்தர் “நாகேஷ் ஒரு மிகப்பெரிய நடிகன். அவனுக்கு முன்னால் நீ ஒரு எறும்புக்கு கூட சமானம் கிடையாது. நாகேஷ் மது பழக்கத்தால் அவனது வாழ்க்கையை அவனே கெடுத்துக்கொண்டான். இனிமே படப்பிடிப்பிற்கு வரும்போது மது அருந்திவிட்டு வந்தால் செருப்பாலயே அடிப்பேன்” என கடுமையாக பேசியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்த ரஜினிகாந்த் “பாலச்சந்தர் அன்று என்னை அப்படி திட்டியபிறகு காஷ்மீர், ஜம்மு, போன்ற குளிர்பிரதேசத்திற்குச் சென்றாலும் கூட நான் படப்பிடிப்பு நாட்களின்போது மது அருந்தியது இல்லை” என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த நாகேஷ், புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும் அதிகமாக இருந்ததால் 1970களில் பிற்பகுதியில் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது கூடுதல் தகவல்.