விஜயகாந்துக்கு வாய்ப்பு கேட்ட பாக்கியராஜ்!.. அட இது தெரியாம போச்சே!...
திரையுலகில் நடிக்க வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமாக கிடைத்துவிடாது. தயாரிப்பாளர், இயக்குனர் அல்லது நடிகரின் மகன் எனில் வாய்ப்பு சுலபமாக கிடைக்கும். இல்லையேல் போராட வேண்டும். நடிப்பு ஆசையில் சொந்த ஊரைவிட்டு சென்னை வந்து சில வருடங்கள் போராடி சினிமா கம்பெனிகளுக்கு சென்று வாய்ப்பு கேட்டு அலைய வேண்டும். நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரை தங்கும் இடம், சாப்பாடு ஆகியவற்றுக்கு பிரச்சனை வராமல் இருக்க வேண்டும். எல்லாம் சரியாக அமைந்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வாய்ப்புகளே கிடைக்காமலும் போகும். சிலர் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள்.
மதுரையிலிருந்து அப்படி சினிமா வாய்ப்பு தேடி வந்தவர்தான் விஜயகாந்த். சில வருடங்கள் போராடி எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடித்து பின் பிரபலமானார். இவர் சினிமாவில் வாய்ப்பு தேடும்போது பலரிடமும் வாய்ப்பு கேட்டு அலைந்துள்ளார். அதில் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜும் ஒருவர். பாக்கியராஜ் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர்.
கே.வி.பாலகுரு என்பவர் இயக்கத்தில் 1979ம் வருடம் வெளிவந்த திரைப்படம் கன்னி பருவத்திலே. இந்த படத்திற்கு திரைக்கதை, வசனத்தை பாக்கியராஜ் எழுதியிருந்தார். அதோடு, ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் ராஜேஷ் ஹீரோவாகவும், வடிவுக்கரசி கதாநாயகியாகவும் நடித்திருப்பார்கள்.
ராஜேஷ் நடித்த வேடத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்கவே பாக்கியராஜ் ஆசைப்பட்டுள்ளார். இதுபற்றி ஒரு சினிமா விழாவில் பேசிய பாக்கியராஜ் ‘கன்னி பருவத்திலே படத்தில் ஹீரோ வேடத்தில் விஜயகாந்த் நடித்தால் சரியாக இருக்கும் என நான் நினைத்தேன். ஏனெனில், கிராமத்து முகம், மாடு பிடிக்கும் வேடத்திற்கு பொருத்தமான உடம்பு, வசீகரமான கண்கள் என அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
எனவே, அவரை அழைத்துக்கொண்டு அப்படத்தின் தயாரிப்பாளர் ராஜாக்கண்ணுவிடம் சென்று இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். அவரோ பாசிட்டிவாக எதையும் சொல்லவில்லை. இரண்டு மூன்று முறை விஜயகாந்தை அவரிடம் அழைத்து சென்றேன். அப்போது என்னிடம் ‘அந்த வேடத்திற்கு உங்க வாத்தியார் (பாரதிராஜா) வேறு ஒருவரை முடிவு செய்துவிட்டார். அதை மீற முடியாது’ என சொல்லிவிட்டார். ஆனாலும் விஜயகாந்த் சரியான நேரத்தில் அறிமுகமாகி அவருக்கான இடத்தை பிடித்தார்’ என பாக்கியராஜ் பேசினார்.