கவிஞரை வற்புறுத்தி பக்தி பாடல் எழுத வைத்த குன்னக்குடி வைத்தியநாதன்… இப்படி ஒரு கதை இருக்கா?..
தமிழ் சினிமாவில் கடவுள் முருகனை புகழ்ந்து பல பக்தி பாடல்கள் வெளிவந்திருக்கிறது. அதில் மிகவும் பிரபலமான பாடலாக “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” என்ற பாடல் அறியப்படுகிறது.
இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் “கந்தன் கருணை”. இத்திரைப்படம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார். கே.வி.மகாதேவன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கே.பி.சுந்தராம்பாள், ஜெயலலிதா, சாவித்திரி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இத்திரைப்படம் மிகப்பிரபலமான முருகன் திரைப்படமாக அமைந்தது.
வற்புறுத்தி எழுதப்பட்ட பக்தி பாடல்
இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன். பூவை செங்குட்டுவன் பக்தி பாடல்களை எழுதமாட்டாராம். எனினும் அவரை வற்புறுத்தி எழுதவைத்திருக்கிறார் இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன். ஆனால் இந்த பாடலை கச்சேரிகளில் பாடுவதற்காகத்தான் எழுதினாராம்.
அவ்வாறு ஒரு கச்சேரிக்கு இயக்குனர் ஏபி நாகராஜனும் கவிஞர் கண்ணதாசனும் சென்றிருக்கின்றனர். அப்போது “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்” பாடலை சூளமங்கலம் சகோதரிகள் பாடியிருக்கின்றனர். இந்த பாடல் ஏபி நாகராஜனுக்கு மிகவும் பிடித்துப்போனது. இந்த பாடலை தான் அப்போது இயக்கிக்கொண்டிருந்த “கந்தன் கருணை” திரைப்படத்தில் பயன்படுத்த வேண்டும் என நினைத்தாராம்.
கே.வி.மகாதேவனின் பெருந்தன்மை
அதன்படி இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரான கே.வி.மகாதேவனிடம் சென்று “குன்னக்குடி வைத்தியநாதன் ஒரு அருமையான முருகன் பாடலை இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை நமது படத்தில் பயன்படுத்திக்கொள்ளலாமா?” என கேட்டிருக்கிறார்.
அதற்கு கே.வி.மகாதேவன், “குன்னக்குடி வைத்தியநாதன் நம்ம பையன்தானே. தாராளமாக அந்த பாடல் இதில் இடம்பெறட்டும். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என கூறினாராம். இவ்வாறு வேறொரு இசையமைப்பாளர் இசையமைத்த பாடலை தான் இசையமைக்கும் படத்தில் இடம்பெற மிகவும் பெருந்தன்மையோடு அனுமதி தந்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.