காலம் போற்றும் காதல் காவியம்… காதலிக்க நேரமில்லை திரைப்படம் உருவானது குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள்…
நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி என்று போற்றப்படும் இயக்குனர் ஸ்ரீதர், 1964 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இத்திரைப்படம் வெளிவந்தபோது அப்போதைய இளைஞர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்போதும் இத்திரைப்படம் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் ஜாலியான ஒரு காதல் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.
இந்த நிலையில் “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தை குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை இப்போது பார்க்கலாம்.
“காதலிக்க நேரமில்லை” திரைப்படத்திற்கு புது முகங்களை அறிமுகப்படுத்தலாம் என முடிவெடுத்த ஸ்ரீதர், அதற்கான தேடலில் இருந்தார். அப்போது ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டின் உதவியாளர் ஒருவர் ஸ்ரீதரிடம், “திருச்சில எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான். அவன் சிலோன்ல வேலை பாத்துட்டு இப்போ இங்க வந்திருக்கான். அவனை கொஞ்சம் பாருங்க” என கூற அதற்கு ஸ்ரீதரும் சரி என்று கூறியிருக்கிறார்.
அதன் பின் ஒரு நாள் அந்த உதவியாளர் அந்த பையனை ஸ்ரீதரிடம் அழைத்து வந்திருக்கிறார். “எதாவது நடித்துக் காண்பி” என ஸ்ரீதர் அந்த பையனை பார்த்துக் கூற, அதற்கு அந்த பையன் தனது நடிப்புத் திறமையை கொஞ்சம் காண்பித்திருக்கிறார். இந்த பையன் நன்றாக துடுப்பாக இருக்கிறாரே என்று எண்ணிய ஸ்ரீதர் அவருக்கு ஓகே சொன்னார். அவர்தான் ரவிச்சந்திரன்.
அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் கோவை செழியன் ஒரு நாள் ஸ்ரீதரை சந்தித்தபோது, “நான் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வரும்போது ஒரு Air Hostess-ஐ பார்த்தேன். அந்த பெண் மிகவும் அழகாக இருந்தாள். நீங்கள் கதாநாயகியை தேடிக்கொண்டு இருக்கிறீர்களாமே. அவளை வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்” என கூறியிருக்கிறார். உடனே அந்த பெண்ணை வரவழைத்து அவருக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ஸ்ரீதர். அவரது பெயர் வசந்தரா தேவி. ஆனால் காஞ்சனா என்று பெயரை மாற்றி அவரை அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர்.
அதே போல் நடிகை ராஜஸ்ரீ, அப்போது தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாராம். அவரை தமிழில் நடிக்க வைத்திருக்கிறார் ஸ்ரீதர். மேலும் முத்துராமன், நாகேஷ், டி.எஸ்.பாலய்யா என பலரையும் ஒப்பந்தம் செய்தார் ஸ்ரீதர்.
நடிகர்களின் தேர்வு முடிந்தவுடன் படப்பிடிப்பிற்கான பூஜை போடப்பட்டது. அப்போது பல அபசகுணங்கள் நடந்தன. அதாவது பூஜையின் போது ஒரு நல்ல தொடக்கத்துக்காக ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டின் சிறு வயது மகனை அழைத்து கேமரா பட்டனை ஆன் செய்ய சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த பையன் அழுதுகொண்டே செட்டை விட்டு ஓடிவிட்டானாம்.
அதே போல் பூஜைக்கு வரவேண்டிய ஐயரும் மிக தாமதமாக வந்தாராம். ஆதலால் படக்குழுவினரே ஆரத்தி எடுத்திருக்கின்றனர். அப்படி எடுத்தபோது அந்த ஆரத்தியும் அணைந்திருக்கிறது. இந்த அபசகுணங்களை எல்லாம் தாண்டி படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள். அப்போது கேமராவின் பெல்ட் அருந்துவிட்டதாம். எனினும் அத்திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். இவ்வளவு அபசகுணங்களை தாண்டியும் அத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.