சிவாஜி சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவர் இந்த நடிகரா? என்ன ஒரு ஆச்சரியம்..!

Sivaji
நடிகர் திலகம் சிவாஜி நடித்த முதல் படம் பராசக்தி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவரது நடிப்பு தான் தமிழ் சினிமா உலகில் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகிறது. அப்பேர்ப்பட்ட இந்த மகா நடிகர் சினிமா உலகில் ஆர்வம் கொண்டு வர காரணமாக இருந்த நடிகர் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
நடிகர் காகா ராதாகிருஷ்ணன் 1949ல் மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பி.யு. சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, கமல் வரை உள்ள நடிகர்களுடன் நடித்துள்ளார்.
உலகநாயகன் கமலுக்கு இவரை மிகவும் பிடிக்குமாம். அதனால் தான் தனது தேவர்மகன், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் முக்கியமான ரோலில் இவரை நடிக்க வைத்தாராம். சிவாஜியின் சொந்த ஊரான சங்கிலியாண்டபுரத்தில் தான் காகா ராதாகிருஷ்ணன் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் வெள்ளையன். காகா ராதாகிருஷ்ணனுக்கு 4 வயது இருக்கும்போதே அவர் இறந்துவிட்டார்.

Kaka radhakrishnan
சிறுவயதில் சிந்தாமணி படத்தைப் பார்க்க காகா ராதாகிருஷ்ணன் போனாராம். அன்று முதல் சினிமாவில் ஆர்வம் வந்துவிட்டதாம். உடனே எம்கே.தியாகராஜபாகவதரைப் பார்க்கப் போனார். அவர் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். அவரது வீட்டுக்குப் பக்கத்து வீடு தான் சிவாஜி வீடு. தினமும் குளிப்பதற்கு காகா ராதாகிருஷ்ணன் வீட்டுக்குத் தான் சிவாஜி வருவாராம். அப்போது நாடகம் பற்றி காகா ராதாகிருஷ்ணன் அவரிடம் பேசி ஆர்வத்தை வரவழைத்தாராம்.
அப்போதே சிவாஜி நாடகக்கம்பெனியில் சேர வேண்டும் என்று முடிவு எடுத்தாராம். அப்போது சிவாஜியும் காகா ராதாகிருஷ்ணன் சேர்ந்த யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளையின் நாடகக்குழுவில் சேர்ந்து விட்டாராம். இப்படித் தான் அவர் சினிமாவிலும் அறிமுகமானார். அந்த வகையில் மங்கையர்க்கரசி காகா ராதாகிருஷ்ணனின் முதல் படமானது. அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து வெளியான பராசக்தி சிவாஜியின் முதல் படமானது. இருவரும் இணைந்து நடித்த படம் மனோகரா.
மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் சித்ரா லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.