என்.எஸ்.கே சம்பளமாக கொடுத்த ஒரு ரூபாயை பத்தாயிரம் ரூபாயாக மாற்றிக்காட்டிய கலைஞர்… மாயமில்லை! மந்திரமில்லை!

NS Krishnan and Kalaignar
முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் தமிழ் வல்லமையை குறித்து பலரும் அறிவார்கள். தனது அனல் பறக்கும் வசனங்களின் மூலம் ரசிகர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தும் திறமை படைத்தவர் கலைஞர்.
கலைஞர் முதன்முதலாக வசனம் எழுதிய திரைப்படம் ராஜகுமாரி. இதில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க மாலதி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கியிருந்தார். ஜூபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.

Kalaignar M. Karunanidhi
இத்திரைப்படத்தின் வசனங்களை கலைஞர் எழுதியிருந்தாலும், அவரது பெயர் உதவி வசனக்கர்த்தா என்ற டைட்டிலின் கீழ்தான் இடம்பெற்றிருந்தது. எனினும் “ராஜகுமாரி” திரைப்படத்தை தொடர்ந்து “அபிமன்யு” என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதினார் கலைஞர். ஆனால் இந்த படத்தில் அவரது பெயர்கூட இடம்பெறவில்லை.
இதனால் பொங்கி எழுந்த கலைஞர், நேராக ஜூபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனத்தாரை சந்தித்து நியாயத்தை கேட்டார். ஆனால் அந்த நிறுவனத்தாரோ கலைஞரை அவமானப்படுத்தினார். இதனால் ஜூபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்துவிட்டார் கலைஞர்.

Kalaignar M. Karunanidhi
மேலும் சினிமாவின் மீதும் வெறுப்பு வந்துவிட்டது. இனி சினிமாக்களுக்கு வசனம் எழுதுவதில்லை என முடிவு செய்து திருவாரூக்கு கிளம்பிவிட்டார். இதனை தொடர்ந்து குடந்தை பகுதியில் கலைஞர் எழுதிய “மந்திரி குமாரி” என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தை பார்த்த மார்டன் தியேட்டர்ஸைச் சேர்ந்த கவிஞர் கா.மு.செரிஃப்க்கு அந்த நாடகம் மிகவும் பிடித்துப்போனது.
“மந்திரி குமாரி” நாடகத்தை திரைப்படமாக எடுத்தால் நிச்சயம் வெற்றிபெறும் என எண்ணிய கா.மு.செரிஃப், நேராக மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான டி.எம்.சுந்தரத்திடம் சென்று “மந்திரி குமாரி” நாடகத்தை பார்க்கும்படி கூறினார். அதன் பின் அந்த நாடகத்தை பார்த்த டி.எம்.சுந்தரத்திற்கும் நாடகம் மிகவும் பிடித்துப்போனது.

Mandhiri Kumari
அதனை தொடர்ந்து மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் இருந்து கலைஞருக்கு அழைப்பு வந்தது. ஆனால் ஜூபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமானத்தால் “மந்திரி குமாரி” திரைப்படத்திற்கு வசனம் எழுத தயங்கினார். ஆனால் கா.மு.செரீஃப், கலைஞரிடம் “மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனரான டி.ஆர்.சுந்தரம் திறமைசாலிகளை மதிப்பதில் தயக்கமே காட்டமாட்டார்” என கூறி கலைஞரை சமாதானப்படுத்தி அழைத்துப்போனார். அதனை தொடர்ந்து “மந்திரிகுமாரி” திரைப்படத்தில் பணியாற்றினார் கலைஞர். இந்த முறை கதை என்ற டைட்டிலின் கீழ் கலைஞரின் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவத்தில் மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் எழுத்தாளர் பணிக்கு அமர்ந்தார் கலைஞர்.
இதனை தொடர்ந்து “மந்திரி குமாரி” திரைப்படத்தை பார்த்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அத்திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனங்கள் மிகவும் பிடித்துப்போனது. ஆதலால் என்.எஸ்.கிருஷ்ணன், தான் தயாரித்து இயக்கயிருந்த “மணமகள்” திரைப்படத்திற்கு கலைஞரை வசனம் எழுத அழைத்தார்.

NS Krishnan
கலைஞரை ஒப்பந்தம் செய்தபோது அவரிடம் “என்ன சம்பளம் வேண்டும்?” என கேட்டார் என்.எஸ்.கே. அதற்கு கலைஞர் “உங்கள் விருப்பம், உங்களால் எவ்வளவு கொடுக்கமுடியுமோ கொடுங்கள்” என கூறியிருக்கிறார்.
அப்போது என்.எஸ்.கே. ஒரு சின்ன காகிதத்தில் 0000 என நான்கு பூஜ்ஜியங்களை போட்டு கலைஞரிடம் நீட்டி “சம்மதமா?” என நக்கலாக கேட்டார். அதற்கு கலைஞரும் “சம்மதம்” என்று கூறினார்.
“அந்த காகிதத்தில் நான்கு பூஜ்ஜியங்கள்தான் இருக்கிறது. நீங்கள் சம்மதம் என்று சொல்கிறீர்களே?” என என்.எஸ்.கே கேட்க, அதற்கு கலைஞர் “தெரியும், பாத்துட்டுத்தானே சம்மதம் என்று கூறினேன்” என பதிலளித்தார்.

Kalaignar M. Karunanidhi
இந்த பதிலை கேட்ட என்.எஸ்.கே, “சரி, இப்போ இதுல 1 எங்க போடனும்?. நாலு பூஜ்ஜியங்களுக்கு முன்பு போடவா இல்லை நான்கு பூஜ்ஜியத்திற்கு பின்பு போடவா?” என கேட்டிருக்கிறார். அதற்கு கலைஞர் “நீங்க எங்க போட்டாலும் சரி” என பதிலளித்தார்.
உடனே என்.எஸ்.கே. அந்த பூஜ்ஜியங்களுக்கு பின்னால் 1 என்று எழுதி கலைஞரிடம் கொடுத்தார். அதனை பார்த்த கலைஞர் அந்த காகிதத்தை அப்படியே தலைகீழாக திருப்பி கலைவாணரிடம் கொடுத்தார். இப்போது அந்த காகிதத்தில் கலைவாணர் எழுதியிருந்த 1 என்ற எண், பூஜ்ஜியங்களுக்கு முன்னால் இருந்தது. அதனை பார்த்த என்.எஸ்.கே, “என்னை விட கெட்டிக்காரனாக இருக்கிறாயே” என்று கலைஞரை பாராட்டினார்.