“இப்படி எழுதிக்கோ, சரியா இருக்கும்”… எம்.ஜி.ஆருக்கு கலைஞர் எழுதிய பாடல்… அடடா!!
எம்.ஜி.ஆர் தனியாக கட்சி தொடங்குவதற்கு முன், கலைஞருடன் மிக நெருங்கிய நண்பராக திமுகவில் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார். அந்த காலத்தில் எம்.ஜி.ஆர், தனது பல திரைப்படங்களில் திமுகவிற்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் வசனங்கள் பலவற்றை பேசி நடித்துள்ளார். குறிப்பாக அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் படங்களில் இடம்பெற்ற பாடல்களில் பல வரிகள் திமுகவிற்கு மறைமுக ஆதரவான வரிகளாகவே இருக்கும்.
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்”, “உதயசூரியனின் பார்வையிலே” போன்ற வரிகள் எல்லாம் திமுகவை குறிக்கும் வரிகள்தான். இதனை கவிஞர் வாலி பல பேட்டிகளில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கலைஞருடன் எம்.ஜி.ஆர் இணைந்து பயணித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் வெளிவந்த திரைப்படம்தான் “எங்கள் தங்கம்”. இத்திரைப்படம் 1970 ஆம் ஆண்டு உருவானது.
“எங்கள் தங்கம்” திரைப்படத்தை தயாரித்தவர் முரசொலி மாறன். இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவிஞர் வாலி. “தங்கப்பதக்கத்தின் மேலே”, “நான் செத்துப் பொழச்சவன்டா” போன்ற பிரபலமான பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றவைதான்.
“எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பாடல் பதிவின்போது ஒரு நாள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு மெட்டை உருவாக்க, அந்த மெட்டுக்கு ஏற்றார்போல் வாலி பாடல் எழுதிக்கொண்டிருந்தார்.
“நான் அளவோடு ரசிப்பவன்” என்று பாடலின் முதல் வரியை வாலி எழுதிவிட்டார். ஆனால் இரண்டாவது வரி அந்த மெட்டுக்கு ஏற்றார்போல் அவருக்கு தட்டுப்படவில்லை. மிகவும் திணறிக்கொண்டிருந்தார் வாலி.
அந்த நேரத்தில் கலைஞர் உள்ளே வர, வாலியிடம் “என்ன வாலி, பாட்டு எழுதிட்டு இருக்கியா?” என கேட்டார். அதற்கு வாலி “முதல் வரி மெட்டுக்கு ஏற்றார் போல் அமைந்துவிட்டது. ஆனால் இரண்டாவது வரியை எழுதமுடியவில்லை” என தனது நிலையை கூறினார்.
உடனே கலைஞர் முதல் வரியை வாங்கி பார்த்தார். “நான் அளவோடு ரசிப்பவன்” என எழுதப்பட்டிருந்தது. உடனே கலைஞர் “எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று எழுதிக்கோ” என கூறிவிட்டுச் சென்றுவிட்டாராம். அந்த வரி அப்படியே மெட்டுக்கும் பொருந்தியிருக்கிறது. மேலும் இந்த வரி எம்.ஜி.ஆரின் தாராள மனதை குறிப்பதுபோலவும் இருந்தது.
அதன் பின் முழு பாடலும் பதிவு செய்யப்பட்டது. இப்பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் வாலியை பாராட்டி முத்தம் கொடுத்தாராம். குறிப்பாக “அளவின்றி கொடுப்பவன்” என்ற வரியை குறித்து சிலாகித்தாராம். அப்போது வாலி “இந்த முத்தத்தை கலைஞருக்கு கொடுங்கள். அந்த வரியை எழுதியது அவர்தான்” என கூறினாராம்.
இவ்வாறு மிகவும் நெருங்கி பழகி வந்த இரு லெஜண்டுகள், பின்னாளில் எதிர் எதிர் துருவமாக பிரிந்துபோனது விதியின் விளையாட்டு என்றுதான் கூறவேண்டும்.